மாரடைப்பு - ஒரு 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னால், 40 வயதைத் தாண்டியவர்களுக்கு வந்து கொண்டிருந்தது. பொதுவாக, மாரடைப்பு ஏற்படும்போது தலைசுற்றல், சுவாசிப்பதில் பிரச்சனை மற்றும் நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் தென்படும். ஆனால், இன்றைய நவீன காலகத்தில் யாருக்கு, எப்படி, எப்போது மாரடைப்பு வரும் என்பதை கணிக்க முடியவில்லை. பெரிய அளவில் எந்த ஒரு அறிகுறியும் தென்படாமல் அமைதியான முறையில் ஒருவரைத் தாக்குகிறது. இதனையே சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்கிறார்கள் மருத்துவர்கள்.
20 வயது இளைஞர்கள் முதல் வயதானோர் வரை அவர்களின் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகும் செய்திகளை அடிக்கடி கண்டும் கேட்டும் வருகிறோம். இந்தச் செய்திகளை கேட்கும் போதெல்லாம் மனம் பதறுகிறது. ‘ஒருவேளை நமக்கும் மாரடைப்பு இருக்குமோ’ என்ற எண்ணம் எட்டிப்பார்க்கிறது.
சைலண்ட் ஹார்ட் அட்டாக் பெரும்பாலும், புகைபிடித்தல், மது அருந்துதல், உட்கார்ந்தே இருக்கக்கூடிய வாழ்க்கை முறை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மேலும், இந்த அமைதியான முறையில் ஏற்படும் சைலண்ட் ஹார்ட் அட்டாக் பற்றி தற்கால இளம் தலைமுறையினர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. ஆனால், நம் உடலில் நிகழும் சின்ன சின்ன சமிக்ஞைகளை வைத்து இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக்கை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
சைலண்ட் ஹார்ட் அட்டாக்கில், மார்பின் இடது புறத்தில் வலியை உணருவதற்குப் பதிலாக மார்பின் நடுவில் வலியை உணர முடியும். இந்த வலியானது பல நிமிடங்கள் நீடிக்கலாம் அல்லது விட்டு விட்டு வலி ஏற்படலாம். சில நேரங்களில் வலி இல்லமால் அந்தப் பகுதியில் ஒருவித அசௌகரிகத்தை உணரலாம்.
உடற்சோர்வு மற்றும் அசௌகரிகம்: எந்த ஒரு காரணமும் இல்லாமல் அடிக்கடி உடல் களைப்பாகவே அல்லது சோர்வாகவே இருப்பதை உணரலாம். முதுகு, கை, வயிறு மற்றும் கழுத்துப் போன்ற உடலின் மேற்பகுதிகளில் அடிக்கடி வலி அல்லது அசௌகரிகத்தை உணரலாம். ஆனால், கூடுதல் வேலை நேரம் மற்றும் போதிய தூக்கமில்லாமை போன்றவற்றால் ஏற்படுகிறது என சிலர் இதை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள்.
மூச்சு விடுவதில் சிரமம்: சைலண்ட் ஹார்ட் அட்டாக்கில் போதிய அளவு உடல் இயக்கம் இல்லாத போதும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
அதிகப்படியான வியர்வை மற்றும் குமட்டல்: வழக்கத்திற்கு மாறாக ஓய்வெடுக்கும்போதோ அல்லது எந்த ஒரு வேலையும் செய்யாத போதோ அதிகமாக வியர்வை வெளியேறுவதை உணரலாம். குமட்டல் உணர்வு மற்றும் தலைவலி போன்றவை தொடர்ந்து ஏற்பட்டால் அது அமைதியான மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
அதுபோக, மயக்கம், தலைசுற்றல், மந்தமான நிலைமை, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளும் தென்படலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதயம் பலவீனமடைந்து இயங்கும் போது, உடலில் இதுபோன்ற அறிகுறிகளை நமக்குத் தெரியப்படுத்தும். இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறியை உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. சில சமயங்களில் இந்த அறிகுறிகள் வேறு சில உடல் உபாதைகளினால் ஏற்படும் மெலிதான, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவையாகக் கூட இருக்கலாம். எனினும், எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் அல்லவா?