நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் நெய்யையும் தேனையும் (Ghee and Honey) இதுபோல எடுத்துக்கொண்டால் அது உடலில் நஞ்சாக மாறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. எப்படி எடுத்துக்கொள்ள கூடாது? அதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமா?
தனிதனியே பார்க்கும்போது, நெய்யும் தேனும் பல ஆரோக்கியப் பலன்களைக் கொண்டவை. நெய் உடலுக்குக் குளிர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான ஆற்றலை அதிகரிக்கும். தேன் உடலின் உஷ்ணத்தை குறைப்பதோடு, ஒரு சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தியாகவும் விளங்குகிறது. ஆனால், இவற்றை சம அளவில் (1:1 விகிதத்தில்) கலக்கும்போது அவற்றின் இயல்பு மாறி, அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது இரண்டு சம அளவு நன்மை தரும் இந்த பொருட்கள் உடலில் விஷமாக மாறுகிறது என்று சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது.
இந்த இரண்டு உணவு பொருட்களை சம அளவில் எடுத்துக்கொள்ளும்போது, தேனில் உள்ள இயற்கை அமிலங்களும் நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்களும் ஒன்றாக செயல்பட்டு, செரிமானமாவதை கடுமையாக்குகிறது. இது விஷத்தன்மையை உருவாக்குகிறது.
இங்கே 'விஷம்' என்று கூறப்படுவது உடனடியாக உயிரைப் பறிக்கும் நஞ்சு என்பது அல்ல. மாறாக, இது உடலால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத, சரியாகச் செரிக்கப்படாத ஒரு சிக்கலான தன்மையாகும்.
விளைவுகள்:
செரிமானக் கோளாறு: சம அளவில் எடுத்துக்கொள்ளும்போது இது உடலில் நீண்ட நேரம் தங்கி, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு, உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும்.
சரும நோய்கள்: இது நீண்ட காலப் பயன்பாட்டில், அரிப்பு, சொறி போன்ற பல்வேறு சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அக்கால நூல்கள் கூறுகின்றன.
சமநிலை பாதிப்பு: தேனை சூடான பொருளுடன் சேர்ப்பது அதன் இயல்பை மாற்றி, அதில் உள்ள சத்துகளை அழிக்கும். நெய்யும் தேனும் கலக்கும்போது, இந்த உஷ்ணமும் குளிர்ச்சியும் மாறி மாறி உடலின் சமநிலையைப் பாதிக்கிறது.
மருத்துவ ரீதியாக இந்த இரண்டையும் சேர்க்க வேண்டியிருந்தால், எப்போதும் சமமற்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதே விதி.
உதாரணமாக: தேனை ஒரு பங்கு எடுத்தால், நெய்யை இரண்டு பங்குக்கு மேல் எடுக்கலாம் (அல்லது அதற்கு நேர்மாறாக எடுத்துக்கொள்ள வேண்டும்).
இந்த விகிதம், அவற்றின் எதிர்மறை விளைவுகளைத் தவிர்த்து, இரண்டின் நன்மைகளையும் உடலில் பெற உதவுகிறது.
இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே உணவில் சேர்ப்பது நல்லது. அல்லது கொஞ்சம் இடைவெளி விட்டு மற்றொன்றைச் சாப்பிடுவது சிறந்தது. எனவே, நம் முன்னோர்கள் எச்சரித்த இந்த மிக முக்கியமான உணவு விதியைப் பின்பற்றி ஆரோக்கியத்துடன் வாழ்வோம்...
பாரம்பரிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில், எந்த உணவை எதனுடன் சேர்க்க வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பதில் மிகவும் நுணுக்கமான விதிகள் உள்ளன. இவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தகவல்தான் இது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)