

உப்பு(Salt) என்பது சுவைக்காக மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை சரியான அளவில் வைக்கவும், உடலின் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கும் உதவும். 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. உப்பில்லாத உணவு ருசிக்காது. உடலில் நீரேற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் தசை ஆரோக்கியத்தை ஆதரிப்பது முதல் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துவது வரை, உடல் நச்சுக்களை நீக்குதல் முதல் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது வரை பயன்படும் உப்பு, உணவுப் பொருட்களுக்கு சுவையூட்டுவதுடன் செரிமானத்திற்கும் உதவுகிறது.
உப்பில் பல வகைகள் உள்ளன. இந்துப்பு எனப்படும் பிங்க் நிற உப்பு, கருப்பு உப்பு (காலா நமக்), கடல் உப்பு, பொடி உப்பு (சால்ட்) என்று பல உள்ளன. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான். உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்ளும் பொழுது ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
நரம்புகள் அனுப்பும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும். உடலில் இருக்கும் நீர்ச்சத்து வற்றும் அபாயம் உண்டாகும். இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் பரிந்துரையின்படி, ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
1. கடல் உப்பு
கல் உப்பு என்பது இயற்கையான கனிம உப்பாகும். இது சுத்திகரிக்கப்படாத இயற்கையான சோடியம் குளோரைடு. கடல் நீரை ஆவியாக்கி அதிலிருந்து நேரடியாக பெறப்படும் உப்பில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் உள்ளன. இது டேபிள் உப்பை விட குறைவாகவே பதப்படுத்தப்படுகிறது. இந்த கல் உப்பு டேபிள் சால்ட் எனப்படும் பொடி உப்பை விட ஆரோக்கியமானது. ஆனால், இந்த உப்பு வெண்மை நிறம் பெறுவதற்காக பலவிதமான ரசாயனங்கள் மற்றும் கெமிக்கல் பிராசஸ்களுக்கு உட்படுத்தப்படுவது வருத்தமான விஷயமாகும்.
கல் உப்பில் பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சமையலில் சுவையைக் கூட்டும். அத்துடன் வாஸ்து சாஸ்திரத்தில் கல் உப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் துர்சக்திகளை விரட்டி திருஷ்டியைப் போக்கும் வல்லமை உப்புக்கு உண்டு. எதிர்மறை ஆற்றலைக் குறைத்து, வீட்டிற்கு மகிழ்ச்சியும் அமைதியும் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
2. கருப்பு உப்பு (Black salt)
பிங்க் சால்டைப் போலவே சில மலைப்பாங்கான இடங்களில் பழுப்பு முதல் கருப்பு நிறங்களில் கனிமங்கள் நிறைந்த கருப்பு உப்பு கிடைக்கிறது. தெற்காசியாவில் பயன்படுத்தப்படும் காரமான, கடுமையான கந்தக நெடியுடன் கூடிய சூளையில் எரிக்கப்பட்ட பாறை உப்பாகும். இது இமயமலை கருப்பு உப்பு, பிட் லோபன், காலா நமக், கலாநூன் அல்லது படாலூன் என்றும் அழைக்கப்படுகிறது.
காலா நமக் என்று குறிப்பிடப்படும் இது இமயமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டப்பட்ட சுரங்கங்களில் கிடைக்கும் பாறை உப்புகளிலிருந்து கருப்பு உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் சில சுவடு கூறுகள் நிறைந்துள்ளன. கருப்பு உப்பு மிகவும் கடுமையான வாசனை மற்றும் சுவை கொண்டது.
இவை வங்காள தேசம், நேபாளம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற தெற்காசிய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சாட் ஐட்டங்கள், சாலடுகள் போன்ற உணவுகளுக்கு கருப்பு உப்பு தனித்துவமான சுவையை வழங்குகிறது. சில இடங்களில் ஊறுகாய்களிலும் சேர்க்கப்படுகிறது. செரிமானத்திற்கு உதவக்கூடிய இந்த உப்பை கர்ப்பிணிகள் மற்றும் சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பயன்படுத்துவது நல்லது.
உப்பு மருத்துவம்
உப்பு மருத்துவம் என்பது உப்புக் கரைசலை(சோடியம் குளோரைடு மற்றும் தண்ணீர் கலவை) பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. காயங்களை சுத்தம் செய்ய உப்புக்கரைசல் பயன்படுகிறது. காண்டாக்ட் லென்ஸ்களை சுத்தம் செய்வதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. நீரிழப்பு அல்லது ரத்த அளவை சரி செய்ய நரம்பு வழியாக உப்புக்கரைசல் செலுத்தப்படுகிறது. உலர் கண்களின் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)