

கடுமையான கோடைக் காலம் தொடங்கி வெயில் சுட்டரிப்பதால் தாகத்தை தணிப்பதற்கு பெரும்பாலும் குளிர்பானங்களையே மக்கள் விரும்புகின்றனர். தங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட ஒரு சிலர், ரசாயன பொருட்கள் கலக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையான முறையில் கிடைக்கும் பானங்களை பருகுகின்றனர். இயற்கையான பானங்களில் இளநீருக்கு (Tender cocunut) எப்பொழுதும் தனி மதிப்பு உள்ளது.
இளநீர் இயற்கையாக கிடைக்கும் பானம் என்பதால் அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் ஏதும் இல்லை. அதே நேரத்தில் உடனடியாக உடலுக்கு ஆற்றலை தரும் எலக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளது. இதில் பொட்டாசியம் , மக்னிசியம் , சோடியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் இளநீர் குடித்த உடனேயே உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. இது இயற்கையான ஒரு வகை குளுக்கோஸ் ஆகும்.
கோடை காலங்களில் வியர்வையின் மூலம் உடலின் நீர் இழக்கப்படுகிறது. இதனால் சோர்வு, ஆற்றல் இழப்பு ஆகியவை ஏற்படுகிறது. இது போன்ற நேரத்தில் உடனடி ஆற்றல் வழங்கும் ஒரு இயற்கையான பானமாக இளநீரை பருகுவது நல்ல பலனை தருகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் தினசரி மூன்று இளநீர் வரை பருகலாம்.
நீரழிவு நோயாளிகளுக்கு அதிகப்படியான இளநீர், சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு நீரிழப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இரத்தத்தில் சோடியம் அளவு குறைந்து தலைசுற்றல், மயக்கம் ஆகியவை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு இதனால், திடீர் ரத்த அழுத்த குறைவு ஏற்படும். இதனால் பதட்டம், கை கால் நடுக்கம் போன்றவை ஏற்படக்கூடும். செரிமானத்திலும் இவை நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி வாயு பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் ஏற்படுத்தலாம்.
ஆரோக்கியமானவர்கள் தினசரி ஒன்று அல்லது இரண்டு இளநீர் பருகுவது பாதுகாப்பானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பொதுவாக சோர்வு தொடங்கும் முன்னரே இளநீர் பருகினால் ரத்த சர்க்கரை சம நிலையை பராமரிக்கும். குறுகிய காலத்தில் இளநீர் அதிகம் பருகாமல், இடைவெளி விட்டு பருக வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)