
சமீபகாலமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அதிசய பானம் தான் ஆப்பிள் சீடர் வினிகர். உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவும் ஒரு அற்புத பானமாக சொல்லப்படுகிறது.
தரமான ஆப்பிள்களை அரைத்து அதனுடன் ஈஸ்ட்டு சேர்த்து புளிக்க வைத்து வடிக்கட்டி கிடைக்கக்கூடிய புளித்த சாறு தான் ஆப்பிள் சீடர் வினிகராகும். இதில் பெக்டீன், வைட்டமின் பி1,வைட்டமின் பி2, வைட்டமின் பி6, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது அமிலம் என்பதால் பலரும் இதைப் பயன்படுத்த அச்சப்படுவதுண்டு. ஆனால், ஆப்பிள் சீடர் வினிகரில் 5 முதல் 6 சதவீதமே அமிலம் இருக்கிறது. இது சாப்பிட உகந்த நிலையில் இருக்கும் பலவீனமான அமிலமாகும். இது நம் உடலின் PH value வை சமநிலைப்படுத்த உதவுகிறது. அஜீரணம், வயிறு உப்புசம், அசிடிட்டி, ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும் என்று சொல்லப்படுகிறது.
ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்துவதால் நம் உடலில் உள்ள Fat metabolism ஐ தூண்டி ஆங்காங்கே சேர்ந்துக் கிடக்கும் கொழுப்புகளை குறைத்து உடல் எடையைக் குறைக்க வெகுவாக உதவுகிறது.
மேலும் இதில் ஏராளமான நுண்ணூட்டச்சத்துக்கள் இருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். இதனால் நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளும் குறையும்.
அஜீரணம், அசிடிட்டி, வயிறு உப்புசம் போன்றவற்றை சரிசெய்ய ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ளலாம். வயிற்றில் சுரக்கும் அமிலம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ வயிறு சம்மந்தமான பிரச்னைகள் வரும். சீரற்ற வயிற்றில் உள்ள அமிலத்தை சீர்செய்யும் ஆற்றல் ஆப்பிள் சீடர் வினிகருக்கு உண்டு.
மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தநாள அடைப்புமேயாகும். ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது மூலமாக இந்தப் பிரச்னையை சரி செய்யலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் அமிலம் இருக்கிறது. இது நாம் சாப்பிடும் உணவில் உள்ள மாவுச்சத்து ரத்தத்தில் சர்க்கரையாக மாறும் வேகத்தை குறைக்கும். இதன் மூலமாக ரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்தலாம். மேலும் கணயத்தில் இருக்கும் பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் ஆப்பிள் சீடர் வினிகருக்கு உண்டு. எனவே, சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் காலை, மாலை வேளைகளில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இதை எடுத்துக் கொள்வது நல்லப்பலனைத் தரும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.