

அக்குபஞ்சர் புள்ளியை எந்தெந்த முறையில் தூண்டி சிகிச்சை அளிக்கலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
அக்குபஞ்சர் புள்ளியை பல்வேறு கோணங்களிலும், பல வித ஆழங்களிலும், நோயின் தன்மைக்கும், நோயாளிகள் உடல் நிலைக்கும் ஏற்ப இயக்க வேண்டி இருக்கும். ஆற்றல் சருமத்தின் மேற்பரப்பிலும், சருமத்தை ஒட்டிய பரப்பிலுமே இருப்பதால், பெரும்பாலும் சருமத்தின் மேற்பகுதியில் வலி ஏற்படுத்தாத வகையில் மட்டுமே இயக்கப்படுகின்றது.
அக்குபங்சர் புள்ளிகள் என்பவை ஆற்றல் மையங்களே. அந்த மையத்திற்கு தேவையான ஆற்றலை பிரபஞ்சத்தில் இருந்து கிரகித்து இயக்குவது அக்குபங்சரின் தத்துவங்களில் ஒன்று. ஊசி என்ன ஆற்றலைப் பெற்றுத் தருமோ அதைவிட பல மடங்கு ஆற்றலை நம் விரல்களால் வழங்க முடியும். ஊசியைப் பயன்படுத்தி செய்யும் சிகிச்சையை விட விரலை பயன்படுத்தி செய்யும் சிகிச்சை ஆற்றல் மிகுந்தது. இருப்பினும், மின்சாரத்தைப் போன்ற இந்த ஆற்றலை எப்படி எந்த வழியில் செலுத்தினாலும் பலன் நன்றாகத் தெரியும் என்பதுதான் நடைமுறை.
அக்குபங்சர் புள்ளி (Acupuncture benefits) கசிய வைத்தல் முறை:
விரல் முனைகள், காது ஓரங்கள் போன்ற சில இடங்களில் லேசாக ஊசியால் குத்தியோ, கூர்மையான ஆயுதங்களின் நுனியினால் கீறிவிட்டோ துளி அளவு ரத்தத்தை கசிய வைத்து நோய்களை நீக்கும் முறையே 'கசிய வைத்தல் முறை' எனப்படும்.
ஏதோ அதிர்ச்சியால் உறைந்து போய் இருப்பவர்கள், ஆழ் துயிலில் இருப்பவர்கள், சரும நோய்கள் ஆகியவற்றுக்கு அக்குபங்சரிலும், மர்ம கலையிலும், வர்மக்கலையிலும், கைதேந்தவர்கள் சிகிச்சை அளிக்கலாம்.
அக்குபங்சர் புள்ளிகளில் ஊசியைப் பதிய வைத்து சிகிச்சை அளிப்பதை பொதுவாக நாள் பட்ட நோய்களுக்குச் செய்கிறார்கள். அதாவது சிறிய ஊசிகளை குறிப்பிட்ட புள்ளிகளில் செலுத்தி அதன் மீது டேப் போன்றவற்றை ஒட்டி வைத்து விடுவார்கள். பிறகு குறிப்பிட்ட மணிகள் அல்லது நாட்களுக்குப் பிறகு நோயின் தன்மையைப் பொறுத்து அவற்றை நீக்கி விடுவது உண்டு.
மர்மக் கலையிலும், வர்மக்கலையிலும் வளையங்கள் போன்றவற்றை வந்த நோய்களை நீக்கவும், நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுவது உண்டு. அதுதான் மூக்கு, காது தொப்புள் போன்ற பல இடங்களில் குத்தி வளையங்கள் போட்டுக் கொள்வதை இன்றைய இளைய தலைமுறையினர் செய்வது. இது ஆரம்ப கால முதலே நடைமுறையில் உள்ள வழக்கம்தான். ஆனால், அதன் காரண காரியங்கள் தெரியாமல் செய்து வந்தோம். இன்று அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சரி. இவ்வளவு பார்த்துக் கொண்டு வருகிறோமே அக்குபங்சர் முறையில் விலங்குகளுக்கும் சிகிச்சை உண்டா? என்று நமக்குள் ஒரு கேள்வி எழுவது இயல்பு. ஆமாம். இது நடைமுறையில் உள்ளது தான்.
யானைக்கு அங்குசமும், மாட்டுக்கு தார் குச்சியும், குதிரைக்கு லாடம் கட்டுவதும் இத்தகைய அக்குபங்சர் முறையைச் சார்ந்தது தான்.
பல சித்தர்கள் எந்த உயிரினத்தையும் கட்டுப்படுத்தவும், நோய் தீர்க்கவும் இது போன்ற முறைகளை பொதுமக்களுக்கு கற்றுக் கொடுத்து சென்றிருக்கிறார்கள் என்பதே உண்மை. சரியான புள்ளியைப் பார்த்து சிகிச்சையைத் தொடர வேண்டியது தான் நாம் கவனம் கொள்ள வேண்டிய முறை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)