இப்போதெல்லாம் பல் துலக்க வேண்டும் என்றாலே எங்கே பிரஷ்? எங்கே பேஸ்ட்? எனத் தேடி அலைகிறோம். ஆனால் அந்த காலத்திலெல்லாம் காலை எழுந்ததும் அப்படியே ஜாலியாக வெளியே நடந்து சென்று வேப்ப மரத்தில் இருக்கும் ஒரு குச்சியை உடைத்து பல் துலக்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். வேப்பங்குச்சி பயன்படுத்தி பல் துலக்குவதால் கிடைக்கும் பயன்களை நாம் கவனிக்க தவறிவிட்டோம். இந்த பதிவில் நமது வாய்ஸ் சுகாதாரத்தில் வேப்பங்குச்சி எதுபோன்ற நன்மைகளைக் கொடுக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள்: வேம்பு சக்தி வாய்ந்த ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது வாய் சுகாதாரத்திற்கு பெரியதளவில் உதவுகிறது. வேப்பங்குச்சியில் பாக்டீரியா, பிளேக் உருவாக்கம் மற்றும் ஈறு நோய்களை எதிர்த்துப் போராட உதவும் Nimbin மற்றும் Gedunin போன்ற கலவைகள் உள்ளன. வேப்பங்குச்சிகளைப் பயன்படுத்தி பல் துலக்குவதால் வாய் தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது.
ஈறு ஆரோக்கியம்: வேப்பங்குச்சியை மென்று பல் துலக்கும்போது அதில் இருக்கும் இயற்கை எண்ணெய் வெளியாகிறது. இந்த எண்ணெய் ஈறுகளை வலுப்படுத்த உதவி ஈறுகளின் ரத்தப்போக்கை தடுக்கிறது. மேலும் இது வாய் துர்நாற்றத்திற்கு எதிராகப் போராடி புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கிறது.
பளபளக்கும் பற்கள்: வேப்பங்குச்சி பற்களின் இயற்கையான வெண்மை நிறத்தை மீட்டெடுக்க உதவும். இதில் இருக்கும் நார் அமைப்பு பற்களின் மேற்பரப்பில் உள்ள கரைகள் மற்றும் தகடுகளை அகற்ற உதவுகிறது. இதன் விளைவாக இயற்கையான பளபளக்கும் வெண்மை பற்களை நீங்கள் அடையலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது: வேப்பங்குச்சியை பல்துலக்க பயன்படுத்துவது பிளாஸ்டிக் டூத் பிரஷர்களுக்கு சிறந்த மாற்றாகும். ஏனெனில் இது மக்கும் தன்மை கொண்டதென்பதால், சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துவதில்லை. மேலும் வேப்பங்குச்சிகள் எளிதில் கிடைக்கும் என்பதால், தேவையில்லாமல் கண்ட பேஸ்ட் வாங்கி நீங்கள் செலவு செய்ய வேண்டாம்.
நமது முன்னோர்கள் பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சிகளை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பல்வேறு விதமான மருத்துவ குணங்களை அறிந்தே நம் முன்னோர்கள் வேப்பங்குச்சிகளை பல் துலக்க பயன்படுத்தினார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் இருந்து நாம் பின்னோக்கி செல்வது கடினம் என்றாலும், உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேப்பங்குச்சிகளைப் பயன்படுத்தி வாரம் இருமுறையாவது பல் துலக்குங்கள்.