மரு பெரும்பாலும் கழுத்து, தொடை இடுக்கு போன்ற உடல் மடிப்புகளில் காணப்படும். நிறைய பேருக்கு சருமத்தில் பார்க்க சின்ன சின்ன புள்ளிகள் அல்லது பொரி போல இருக்கும். தொட்டுப் பார்க்கும்போது குட்டி வீக்கமாகத் தெரியும். இதுதான் மரு எனப்படுகிறது.
மரு சிலருக்கு முகத்திலும் வரலாம். இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. மரபணு, சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற உடல் பிரச்னை காரணங்களால் மரு ஏற்படுகிறது. அழகைக் கெடுப்பது போல் இருப்பதாலும், சிலர் வலி ஏற்படும்போதும் மருவை எடுக்க நினைப்பர்.
ரேடியோஃப்ரீக்வன்சி (Radio frequency) மற்றும் எலெக்ட்ரோஃபல்கரேஷன்( Elctro fulguration) மூலம் மருவை எளிதாக நீக்கலாம். இவை இரண்டுமே வெப்பம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள். இதற்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்தான் ஆகும்.
சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் உள்ளிட்டோர், இரத்தம் உறைதலைத் தடுக்கும் 'பிளட் தின்னர்ஸ்' மாத்திரைகளை எடுத்துக்கொள்வோர் தங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
வைரல் மரு என்பது 'பாப்பிலோமா (papillomavirus) எனப்படும் வைரஸால் ஏற்படும் தொற்று. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஈரமான தரை மற்றும் கடினமான தரையில் நடப்பவர்களுக்கு இது வர அதிக வாய்ப்புள்ளது.
வைரல் மரு கை, கால், உதடு போன்ற பகுதிகளில் ஏற்படும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். உடலிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவும். இதை நீக்க வேண்டியது மிகவும் அவசியம். சிலர் கைகளாலேயே பிய்ப்பது, ஊதுவத்தி நெருப்பில் பொசுக்குவது என செய்வார்கள். இது மிகவும் தவறான செயல்.
இப்படிச் செய்தால் வலி ஏற்படுவதோடு, தொற்று அதிகம் ஏற்பட்டு பிரச்னைகளை கொடுத்து விடும். க்ரையோ தெரபி (Cryotherapy) மற்றும் எலெக்ட்ரோஃபல்கரேஷன் மூலம் இதை நீக்கலாம். மீண்டும் வராது. தகுந்த சரும மருத்துவர் மூலம் மருவை அகற்றுவதால் மறுபடியும் வராததோடு வலி, வீக்கம் போன்றவையும் ஏற்படாது.