இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஒரு குளிர்கால வெஜிட்டபிள் முள்ளங்கி. இதை பராத்தா, சாலட் மற்றும் கறி வகைகளில் சேர்த்து உண்பதுண்டு. மூலிப் பட்டா (Mooli Patta) எனப்படும் முள்ளங்கி இலைகளை சிலர் உபயோகமற்றதென எண்ணி தூரப் போட்டுவிடுவதுண்டு. அதிலிருக்கும் 7 ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொண்டால் எவரும் அதை இனி தூர வீச மாட்டார்கள். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஊட்டச் சத்துக்கள்: முள்ளங்கி இலையில் வைட்டமின் A, C, K ஆகியவையும் இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்களும் அதிகம் உள்ளன. இவை பார்வைத் திறனை மேம்படுத்தவும், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவி புரிகின்றன.
2. ஜீரண சக்தி அதிகரிக்கும்: மூலிப் பட்டாவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம். இவை ஆரோக்கியமான செரிமானத்திற்கும், குடல் இயக்கங்கள் சீராக நடைபெற்று மலச்சிக்கல் நீங்கவும் உதவி புரிகின்றன.
3. உடலிலுள்ள நச்சுக்களை நீக்கும்: இயற்கை முறையில் நச்சுக்களை வெளியேற்ற சிறந்த முறையில் மூலிப் பட்டா உதவும். நச்சுக்களை வெளியேற்றும் செயலில் கிட்னி மற்றும் கல்லீரலுக்கு நல்ல முறையில் உதவி புரிந்து உடலை சமநிலையில் இயங்கச் செய்யும்.
4. நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்: இதிலுள்ள அதிகளவு வைட்டமின் C நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து சளி மற்றும் ஃபுளூ போன்ற நோய்களை உண்டுபண்ணும் தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் பரவாமல் தடுக்க உதவும்.
5. சரும ஆரோக்கியம் காக்கும்: மூலிப் பட்டாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி சருமத்தில் சிதைவேற்படாமல் பாதுகாக்கும். சருமம் ஆரோக்கியத்துடன் பளபளப்புப் பெற்று மின்னவும் உதவும். இதிலுள்ள வைட்டமின் A, சருமத்தில் சிதைவடைந்துள்ள செல்களை சீரமைத்து புத்துணர்வு பெற உதவும்.
6. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்: முள்ளங்கி இலைகள் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டவை. அதனால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்பதற்கு ஏற்ற உணவு இது.
7. வீக்கங்களைக் குறைக்க உதவும்: உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்க உதவும், சக்தி வாய்ந்த கூட்டுப் பொருள்கள் மூலிப் பட்டாவில் உள்ளன. இவை ஆர்த்ரைடிஸ் மற்றும் குளிர் காலத்தில் உண்டாகும் மூட்டுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.
முள்ளங்கி இலைகளை சூப், பருப்பு வகைகள் மற்றும் பராத்தாவில் சேர்த்து சமைத்து உண்ணலாம். சட்னி அரைத்தும் சாப்பிடலாம். இதன் லேசான கசப்பு மற்றும் ஸ்பைசி டேஸ்ட்டானது பல வகையான உணவுகளின் சுவையைக் கூட்ட உதவும். மேலும், பலப்பல ஆரோக்கிய நன்மைகளைத் தரவும் மூலிப் பட்டா உதவி புரியும்.