தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில், சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 20வது தலம் திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவத் தலம் இது.
பெயர் காரணம்: ஈசனின் பெயர் சிவலோகநாதர். அம்பிகையின் பெயர் சொக்கநாயகி. தல விருட்சம் புங்கமரம். புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால் இக்கோயிலுக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது. மிகவும் பழைமையான கோயில் இது. ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ள கோயில்.
நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. புற்று வடிவாய் அமைந்துள்ள சுயம்பு மூர்த்தி சிவலோகநாதருக்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு புனுகு சட்டம் சாத்தப்படுகிறது.
பஞ்ச லிங்கங்கள் மற்றும் குளம் வெட்டிப் பிள்ளையார்: இங்குள்ள பஞ்ச லிங்கங்கள் திருமண வரம், நாக தோஷ நிவர்த்தி போன்றவற்றை அருள்வதால் இங்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயில் குளம் வெட்டிய பிள்ளையார் மிகவும் பிரசித்தம். நந்தனாருக்காக அவர் சிவபெருமானை தரிசிக்கும் முன் குளித்துவிட்டு வர வசதியாக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களைக் கொண்டு குளம் வெட்டினார் என்பது தல வரலாறு.
கோயிலின் சிறப்புகள்: எல்லா கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும். ஆனால், இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு கிடையாது. துவார பாலகர்கள் எல்லா கோயில்களிலும் நேராக இருப்பார்கள். ஆனால், இங்கு தலை சாய்த்து இருப்பர். காரணம் சுவாமியிடம் தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளது. நந்தியும், கொடி மரமும் கருவறைக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம்.
தலப்பெருமை: தமிழகத்தின் கொள்ளிட ஆற்றின் கரையில் வளம் பெற்ற ஆதனூர் என்ற சிற்றூர் உள்ளது. அந்த ஆதனூரின் வெளிப்புறத்தில் பல சிறிய குடிசைகளைக் கொண்ட புலைப்பாடி என்னும் ஊர் இருந்தது. புலையர்கள் வாழ்கின்ற அந்த இடத்திலே நந்தனார் என்ற பெயருடைய ஒருவரும் வாழ்ந்து வந்தார். அவர் தான் இவ்வுலகில் பிறந்து தமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இளம்பிறையை உடைய சிவபெருமானிடத்து மிகுந்த அன்பு கொண்டவராய் இருந்து வந்தார். பெருமானின் திருவடி நினைவின்றி மற்ற எந்த நினைவுகளையும் கொள்ளாது வாழ்ந்து வந்தார்.
சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் கோயிலுக்கு தம்மால் இயன்ற அளவு தொண்டு செய்து வந்தார். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத் தோல், விசிவார் என்பன கொடுப்பதுடன், வீணைக்கும், யாழுக்கும் ஏற்ற வகையில் நரம்புகளையும், அர்ச்சனைக்காக கோரோசனை முதலியவற்றையும் கொடுத்து வந்தார். கோயில் வாயிலில் நின்று தாம் கொண்டு வந்த பொருட்களை கொடுத்துவிட்டு அங்கு நின்றபடியே ஈசனை நோக்கி ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பார். அங்கிருந்தபடியே கோயிலையும், கோபுரத்தையும் தரிசித்து மகிழ்வார்.
ஒரு நாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்கு சென்று வழிபட விரும்பிச் சென்றார். கோயிலின் வெளியே நின்று கொண்டு சிவலோகநாதரை தரிசிக்க முயன்றார். சிவலோகநாதரின் முன்னால் இருந்த நந்தி சிவலோகநாதரை மறைத்துக் கொண்டு இருந்தது. அப்பொழுது பெருமானை நேரில் கும்பிட வேண்டும் என்ற ஆசை பெருகியதால் நந்தனார் வாசலில் இருந்துகொண்டே திருப்புன்கூர் ஈசனை நினைத்து உருகிப் பாடலானார். வேண்டியவருக்கு வேண்டியவாறு அருள் தரும் திருப்புன்கூர் ஈசன் தம்முன் மறைத்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு அருள் செய்து நந்தனாருக்கு தரிசனம் தந்து அருள்புரிந்தார். இதனால்தான் நந்தியும் கொடி மரமும் இத்தலத்தில் விலகி இருப்பதைக் காணலாம்.