Sinus
Sinus

அனைவரையும் அச்சுறுத்தும் சைனஸ் - எதனால் வருகிறது? அறிகுறிகள், தீர்வுகள்! 

Published on

உங்களில் பலர் சைனஸ் பிரச்சனை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.‌ இது மூக்கடைப்பு, தலைவலி, முகத்தில் அழுத்தம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கி பலரை அவதிப்படுத்தும்.‌ எனவே, இது பலருக்கு பெரும் தொந்தரவாகவே இருந்து வருகிறது. சைனஸ் என்பது நம் தலையில் உள்ள காற்று நிரப்பப்பட்ட குழிகளைக் குறிக்கிறது. இந்தக் குழிகள் நம் மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் அமைந்துள்ளன. சைனஸின் முக்கிய செயல்பாடு நாம் சுவாசிக்கும் காற்றை ஈரப்பதமாக்குவதும், வெப்பப்படுத்துவதும் ஆகும். மேலும், இது நம் குரலின் ஒலிக்கும் தன்மையை அதிகரிக்கிறது. 

சைனஸ் வருவதற்கு காரணங்கள்: 

சைனஸ் பிரச்சனை பொதுவாக நாம் அடிக்கடி நோய்வாய்ப்படும் வைரஸ் தொற்றுகள் மூலமாக ஏற்படுகிறது. சில சமயங்களில் வைரஸ் தொற்று பாக்டீரியா தொற்றாக மாறி சைனஸ் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும். 

ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சில பொருட்களின் துகள்கள் மூக்கில் சென்று சைனசை எரிச்சலடையச் செய்யும். இதனால், சைனஸ் பிரச்சினை ஏற்படலாம். ஒரு சிலருக்கு பூஞ்சைத் தொற்று காரணமாக சைனஸ் பாதிக்கப்படும். 

மூக்கின் அமைப்பு சார்ந்த பிரச்சினைகள் நாசித் திசுக்களின் வீக்கம் போன்றவை சைனஸ் பிரச்சனைக்கு காரணமாக இருக்கக்கூடும். இது தவிர புகைபிடித்தல் சைனஸ் திசுக்களை பாதிக்கச் செய்யும். சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் சைனஸ் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். 

சைனஸ் பிரச்சனையின் அறிகுறிகள்: 

  • மூக்கடைப்பு 

  • முகத்தில் அழுத்தம் 

  • தலைவலி 

  • கண்ணம், நெற்றி, பற்களில் வலி 

  • வீங்கிய முகம் 

  • காய்ச்சல் 

  • சளி 

  • வாசனைகளை உணர முடியாமை 

  • தொண்டை வலி

சைனஸ் பிரச்சினைக்கான சிகிச்சை அது எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை பொறுத்து மாறுபடும். இதற்கு பொதுவாக வலி நிவாரணிகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் போன்றவை கொடுக்கப்படும். வீட்டு வைத்திய முறைகளில் நீராவி பிடித்தல், உப்பு நீரைக் கொண்டு மூக்கை சுத்தம் செய்தல் போன்ற முறைகளைப் பின்பற்றி நிவாரணம் அடையலாம். எந்த மருத்துவ சிகிச்சையும் பலன் அளிக்காத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். 

இதையும் படியுங்கள்:
மிக எளிதாக செய்யக்கூடிய குழம்பு வகைகள், மசியல் மற்றும் பச்சடி!
Sinus

சைனஸ் பிரச்சனை என்பது மிகத் தீவிரமான உடல்நலக் குறைபாடு இல்லை என்றாலும், அது பலருக்கு தொந்தரவை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாகும். இதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்தத் தொந்தரவிலிருந்து விடுபட முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் சைனஸ் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கலாம். ஒருவேளை உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருப்பது போல உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெறுவது நல்லது. 

logo
Kalki Online
kalkionline.com