

மனிதனின் அன்றாட வாழ்க்கையில், பழங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். யாராவது உறவினர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட நாம் பழங்களைத்தான் வாங்கிக் கொண்டு செல்கிறோம். ஆனால், எல்லோராலும் பழங்களை வாங்கிச் சாப்பிட முடியுமா? என்று கேட்டால் விற்கின்ற விலைவாசிக்கு அது ஏழை மக்களுக்கு ஒரு எட்டாக்கனி என்று தான் சொல்ல வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி, அத்திப்பழம், பேரிச்சம்பழம் போன்ற எத்தனையோ வகை பழங்கள் இருந்தாலும் அவை விலைவாசியில் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது.
நமது கிராமங்களில் ரோட்டு ஓரங்களிலும், கண்மாய்களிலும் தானாக வளர்ந்து கிடக்கும் இலந்தைப் பழத்தில்(Indian jujube) எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா? இந்தப் பழத்தின் மகத்துவம் அறிந்த மக்கள் மட்டுமே அதனை சாப்பிடுவார்கள். மற்றவர்கள் அது ஏதோ பழம் முளைத்து கிடைக்கிறது என்று விட்டு விடுவார்கள். கோடைக் காலங்களில் இந்தப் பழம் அதிகமாக ஆங்காங்கே முளைத்து கிடக்கும்.
இலந்தைப் பழத்தின் நன்மைகள்
இந்த இலந்தைப் பழத்தை சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகமாக உடலுக்குக் கிடைக்கிறது. அது மட்டும் அல்லாது விட்டமின்களும், தாது உப்புக்களும் அதிகமாக இந்த இலந்தைப் பழத்தில் இருக்கிறது. இந்த இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டால், பித்தம் குறைகிறது. இதனால் நாம் எங்காவது செல்லும்போது தலை சுற்றல், வாந்தி போன்றவை ஏற்படாமல் இருக்கிறது.
பெண்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இவை தீர்க்கின்றன. இதனை சாப்பிடுவதால் பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் ஆடுதல் போன்ற உபாதைகள் தவிர்க்கப்படுகின்றன. இலந்தைப் பழம் சாப்பிடுவதால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் முற்றிலுமாக இல்லாமல் போய் விடுகிறது. தினமும் இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையாகும் . இந்தப் பழம் சாப்பிடுவதற்கு புளிப்பாகவும், சற்று இனிப்பாகவும் இருக்கும். இதனை நிறைய பேர் விரும்பி சாப்பிடுவார்கள்.
இலந்தைப் பழத்தில் ஜாம்!
இலந்தை பழத்தை எடுத்து நன்றாக கழுவி அதனை ஆட்டு உரலில் போட்டு நன்றாக ஆட்டி அவற்றில் கருப்பட்டி அல்லது மண்டவெல்லம் சேர்த்து ஒரு வகையான ஜாம் தயாரிக்கப்படுகிறது. இது புளிப்பு சுவையுடனும், இனிப்பு சுவையுடனும் இருப்பதால் இதனை அதிகமாக குழந்தைகளும், பெரியவர்களும் வாங்கிச் சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த இலந்தைப் பழ ஜாம் என்பது இல்லாமலேயே போய் விட்டது.
எல்லோருக்கும் கிடைக்கும் பழம்!
இந்த பழங்கள் அதிகமாக காடுகளிலும், வீடுகளிலும் தானாக வளர்ந்து நிற்கும். இலந்தைப் பழங்களை கிராமத்து மக்களே அதிகமாக விரும்பி உண்கிறார்கள். அதனால்தான் இந்த இலந்தைப் பழத்தை “ஏழைக்கென்று பிறந்த பழம் எல்லாருக்கும் கிடைக்கும் பழம்” என்று இன்றுவரை கிராமத்து பழமொழி கூறி வருகின்றது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)