இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகியவையே அறுசுவைகள். நம் உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை என ஏழு தாதுக்களைக் கொண்டது. முதலில் உள்ள ஆறு தாதுக்கள் முறையாக செயல்பட்டால்தான், உடலின் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்கும் என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது. உடலின் முதல் ஆறு தாதுக்களும், அறுசுவைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவேதான், நம் முன்னோர்கள், உடல் ஆரோக்கியத்தை வழங்கும் உணவுகளை உண்ண வேண்டும் என்பதற்காக அறுசுவைகளாக பிரித்து, உணவை மருந்தாக உண்டனர். அறுசுவைகளை உணவில் சம அளவில் சேர்த்துக் கொள்வது, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். இல்லையென்றால், உடலில் பிரச்னைகள் ஏற்படும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
இனிப்பு சுவை, தசையை வளர்க்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. அரிசி, கோதுமை, கரும்பு, பலாப்பழம், கொய்யப் பழம், உருளை, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பிற கிழங்கு வகைகளில் இனிப்பு சுவை அதிக அளவில் காணப்படுகிறது. உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தரக்கூடியது இந்த இனிப்புச்சுவை. இது உடலில் அதிகமானால், உடற்சோர்வு, அதிக தூக்கம், உடல் எடை கூடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இனிப்பு சுவையை முற்றிலும் சேர்க்காமல் இருந்தால், நினைவாற்றல் திறன் குறையுமாம். எனவே, உணவில் அளவோடு, இயற்கையான இனிப்பு சுவையைச் சேர்த்துக் கொள்வது அவசியமானது.
புளிப்பு சுவை கொழுப்பினை அதிகரிக்கிறது. எலுமிச்சை, புளித்த கீரை, தக்காளி, மாங்காய், புளி, தயிர், மோர் போன்றவற்றில் இது அதிகம் காணப்படுகிறது. புளிப்பு சுவை நாம் உண்ணும் உணவிற்கு மேலும் ருசியைக் கூட்ட உதவுகிறது. இந்த சுவை, பசியுணர்வை தூண்டுவதற்கும், உணர்வு நரம்புகளை வலுப்படுத்தவும், இதயம் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது. உடலில் புளிப்பு சுவை அதிகமானால், நெஞ்செரிச்சல், பற்கள் பாதிப்பு, இரத்தக் கொதிப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
கார்ப்பு சுவை எலும்புகளுக்கு மிகவும் நல்லது. வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் வகைகள், மிளகு போன்றவற்றில் அதிகமாக காணப்படுகிறது. இது பசியுணர்வைத் தூண்டுவதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அதே சமயம், அதிகப்படியான காரம், குடல் மற்றும் வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. உடல் சூட்டை அதிகரித்து, அதிகப்படியான வியர்வை சுரக்க வழிவகுக்கிறது.
உவர்ப்பு சுவை உணவு செரிமானத்திற்கு உதவும் உமிழ்நீரைச் சுரக்கச் செய்கிறது. சுரைக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, கீரைத்தண்டு, வாழைத்தண்டு போன்றவற்றில் உவர்ப்பு சுவை அதிகம் காணப்படுகிறது. இது உணவுச் செரிமானத்திற்கும், மற்ற சுவைகளை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. உவர்ப்பு சுவை அதிகமானால், சருமம் சுருங்கிப் போதல், பருக்கள், கட்டிகள் போன்ற சரும நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.
துவர்ப்பு சுவை இரத்தத்தைப் பெருக்க உதவுகிறது. வாழைக்காய், மாவடு, அத்திக்காய், அவரை, பாக்கு போன்றவற்றில் துவர்ப்பு சுவை அதிக அளவில் உள்ளது. துவர்ப்பு சுவையானது உடலில், வியர்வையைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கினை சரி செய்கிறது. அதே சமயம், இந்த சுவையை அதிகமாக சேர்த்துக்கொள்ளும்போது, அது, முதுமை தோற்றத்தை விரைவில் ஏற்படுத்துகிறது. வாத நோய்களை அதிகரிக்கச் செய்யுமாம்.
கசப்பு சுவை நரம்புகளைப் பலப்படுத்த உதவுகிறது. பகற்காய், சுண்டைக்காய், எள், வெந்தயம், வேப்பம்பூ, ஓமம் ஆகியவை அதிக கசப்பு சுவை கொண்டவை. கசப்பு சுவை வெறுக்கப்பட்டாலும், உடலுக்கு சிறந்த நோய் எதிப்பு சக்தியைத் தருகிறது. காய்ச்சல், வயிற்றுப் புண்களை சரி செய்கிறது. தாக உணர்வைக் கட்டுப்படுத்தவும், இரத்தத்தைச் சுத்திகரிக்கவும் உதவுகிறது. உணவில் கசப்பு சுவை அதிகமானால், உடலில் அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டு சருமம் வறண்டு போகலாம். அடிக்கடி மயக்கம் ஏற்படலாம்.
ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் இந்த அறுசுவைகளையும் நம் உணவில் சம அளவில் சேர்த்துக்கொண்டு நலமுடன் வாழ்வோமா?