

ஒரு காலத்தில் நமது பாட்டி, தாத்தா ஆகியோரெல்லாம் வெற்றிலை, பாக்கு போட்டார்கள். உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழ்ந்தார்கள். வெற்றிலை, பாக்கு போடுவதால் நமது உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வெற்றிலை பாக்கு போடுவதற்கு ஒரு முறை இருக்கிறது. அந்த முறை எல்லோருக்கும் தெரிவதில்லை. முதலில் அந்த முறையைப் பற்றி நாம் விரிவாய் காண்போம்.
வெற்றிலை (Betel leaves) பாக்கு போடும் முறை
வெற்றிலை, பாக்கு போடும் முறைக்கு 'தாம்பூலம் தரித்தல்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. முதலில் வெற்றிலையை எடுத்து அதனுடைய காம்பை கிள்ளி அதன் நடுவில் இருக்கக்கூடிய நரம்பை உரிக்க வேண்டும். ஏன் இந்த காம்பு மற்றும் நரம்பு பகுதியை அகற்றுகிறோம் என்று கேட்டால், அந்த நரம்பிலும், காம்பிலும் தான் நோய்த் தொற்று உண்டாக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அதனால் தான் வெற்றிலை போடும்போது காம்பையும், நரம்பையும் கிள்ளுகின்றோம்.
பிறகு கலிப்பாக்கு அல்லது வெட்டப்பாக்கு என்று ஏதாவது ஒரு பாக்கை அந்த வெற்றிலையில் கொட்டி அதன் மேல் சுண்ணாம்பை நன்றாக தடவி வாயில் வைத்து மென்று அதிலிருந்து வரும் உமிழ் நீரை முதலில் கீழே துப்ப வேண்டும். இரண்டாவது ஆக வரக்கூடிய உமிழ்நீரை அப்படியே விழுங்க வேண்டும். இவ்வாறு தான் வெற்றிலைப் போட வேண்டும். சிலர் வெற்றிலை போடும்போது அதனோடு பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், இலவங்கம், மிளகு ஆகிய பொருட்களையும் சேர்த்து போடுவார்கள். இவ்வாறு போடுவது சாலச் சிறந்ததாகும்.
வெற்றிலைப் போடுவதால் ஏற்படும் நன்மைகள்
இப்படி வெற்றிலை போடுவதால் நமக்கு ஜீரண சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகமாகும் என்பது நிதர்சனமான உண்மையாகும். நமது ரத்தத்தில் கால்சியம் சத்து குறைவாக காணப்பட்டால் நாம் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுவதால் இந்த கால்சியம் சத்து நமது உடம்பிற்கு கிடைக்கிறது. இதனால் நமது எலும்புகள் வலிமை அடையும். பெண்கள் வெற்றிலை போடுவதால் அவர்களின் பிரசவ காலத்தில் அவர்களுடைய முதுகெலும்பானது வலிமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிலை பாக்கு போடுவதால் நமக்கு நல்ல பசியைத் தூண்டுகிறது.
வெற்றிலையிலும் கூட பாலினம் உண்டு
வெற்றிலையில் கூட ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்று இரண்டு வகை இருக்கிறது. இதனை எப்படி அடையாளம் காண்பது என்று கேட்டால், வெற்றிலையின் காம்பிலிருந்து நடுவில் வரக்கூடிய நரம்பு அதன் நுனிப்பகுதியில் முடிந்தால் அது ஆண் வெற்றிலையாகும். இதே அதன் காம்பிலிருந்து வருகின்ற நரம்பு நுனிப்பகுதிக்கு செல்லாமல் பாதியிலேயே விரிவடைந்து காணப்பட்டால் அது பெண் வெற்றிலை என்று கூறப்படுகிறது. ஆண்கள் ஆண் வெற்றிலையை அதிகமாக சாப்பிட்டால், விந்தணுக்கள் அதிகமாக உற்பத்தி அடையும் என்றும் பெண்கள் பெண் வெற்றிலையை அதிகமாக சாப்பிட்டால், அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அளவு முறைகள்
வெற்றிலை பாக்கு போடுபவர்கள் காலையில் வெற்றிலை போடும்போது பாக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மதியம் வெற்றிலை போடும்போது சுண்ணாம்பு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவில் வெற்றிலை போடும்போது வெற்றிலை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அளவு முறைகளோடு அந்தந்த நேரத்திற்கு ஏற்றார் போல வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றின் அளவுகளை குறைத்தும், கூட்டியும் கொண்டு வெற்றிலைப் போட வேண்டும். இவ்வாறு வெற்றிலை பாக்கு போடுதல் சிறந்த முறையாகும்.
வெற்றிலை, பாக்கு மரியாதையான ஒரு பொருள்
எந்த ஒரு சுபகாரியத்திலும் வெற்றிலை, பாக்கு கட்டாயமாக இருக்கும். நாம் ஏதாவது ஒரு திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தும் போது மற்ற உறவினர்களிடம் சென்று அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களை அழைக்க வேண்டும். ஏனென்றால், வெற்றிலை பாக்கு அந்தக் காலத்தில் இருந்தே மரியாதையான ஒரு பொருளாக இருந்து வருகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)