

சிலருக்கு காலில் ஆணிவந்து நடக்க முடியாமல் கஷ்டப்படுவதுண்டு. அது போன்றவர்கள் எளிமையான வைத்திய குறிப்புகளை (foot care tips) தெரிந்து வைத்துக் கொண்டால் சமயத்திற்கு உதவும். அது போன்ற எளிமையான குறிப்புகள் இதோ:
கால் ஆணி வெகு நாட்களாக இருந்தால் சிறிது நீரில் வெல்லத்தைப் போட்டுகாய்ச்சி பாகு போன்று வரும்போது கரண்டியால் பாகை எடுத்து ஸ்பூனால் சூடு பொறுக்கும் அளவுக்கு இரண்டு சொட்டு ஆணிக்காலில் அந்த இடத்தில் வைக்க வலி குறையும். வளரவும் வளராது.
கால் ஆணியை போக்க இரவில் பாதங்களில் பாதாம் எண்ணெயை மிதமாக சூடாக்கி தடவி வர குணம் பெறும் .
காலில் முள்குத்திய இடத்தில் வலி உள்ள போது பெரியதாக ஒரு கல் உப்பு எடுத்து முள் குத்திய இடத்தின் மேல் வைத்து ஊதுபத்தி நெருப்பால் உப்பின் மேல் சூடு தாங்கும் வரை சூடு போடவும். வலி குறைந்து கால் நடக்கும் அளவுக்கு நல்ல குணம் தரும் .
கால் ஆணி உள்ள இடத்தில் காய்ந்த மிளகாயின் உள் விதைகளை நீக்கி விட்டு அரைத்து கால் ஆணியின் மேல் வைத்து ஒரு துணியை அதன் மேல் கட்டி விட வலி குறையும். இருக்கும் ஆணி மடங்கிவிடும். வளராமலும் குறையும்.
விரலி மஞ்சளுடன் வசம்பு, கற்பூரம், மருதாணி இலைகளை நன்றாக அரைத்து ஒரு வாரம் கட்ட கால் ஆணி குணம் அடையும்.
கால் ஆணி குணமாக ஆணிமேல் அம்மான் பச்சரிசி செடியின் காம்பை ஒடித்தால் பால் வடியும். அந்த செடியின் காம்பில் இருந்து வரும் அந்த பாலை காலில் உள்ள ஆணியில் மேலே காலை, மாலை என இருவேளை மூன்று நாட்கள் போட்டு வர குணம் அடையும் .
ஒரு ஸ்பூன் எருக்க இலைச் சாறுடன் ஐந்து சொட்டு டீட்ரி ஆயில் கலந்து ஆணி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கால் ஆணி நீங்கி குணமடையும்.
காலில் முள்ளோ, ஆணியோ, கண்ணாடித் துண்டோ குத்தி விட்டால் குத்தின இடத்தில் நன்றாக பெவிக்கோலைத் தடவி அப்புறம் உலர்ந்தவுடன் பிய்த்து எடுத்தால் உள்ளேயிருக்கும் முள்ளோ, ஆணியோ, கண்ணாடித் துண்டோ அத்துடன் வந்துவிடும்.
கடுகு எண்ணெயை பித்த வெடிப்பில் தினம் இரவில் தடவி விட்டு பிறகு காலையில் எழுந்ததும் தேய்த்துக் கழுவ வெடிப்பு மறையும்.
குறிப்பாக கால்களுக்கு அதிக வேலை கொடுத்தால் மூட்டுக்கு பாதிப்பு ஏற்படும். அதிக உடற்பயிற்சி, அதிக ஓட்டம், அதிகமாக நடப்பது போன்றவைகளும் மூட்டுகளை பாதிக்கும். அதனால் தினசரி ஓட்ட பயிற்சி எடுப்பவர்கள் இடை இடையே ஒரு சில நாட்கள் நீச்சல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கால்களுக்கு யோகா பயிற்சி நல்லது. கால்களில் இறுக்கமான செருப்புகளை அணியக்கூடாது. செருப்புகளை அணிந்தால் உள் பாதங்கள் நெகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளியாக இருந்தால் தினமும் பாதங்களை சுடுநீரில் முக்கி துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
இறுக்கமான ஷூ போன்ற காலணிகளாலும் கால் நகங்கள் இறுக்கப்பட்டு வளர்ச்சி குன்றி போகும். மிகவும் கடினமான காலணிகளை அணிந்தாலும், காலுக்கு பொருந்தாத காலணிகளை அணிந்தாலும் வெடிப்பு வருவதற்கும், ஆணி வருவதற்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. அதனால் இது போன்றவற்றை தவிர்த்து விட்டு காலுக்கு ஏற்புடையதாக நடப்பதற்கு வசதி உள்ளதாக உள்ள காலணிகளை அணிந்தால் இவைகளில் இருந்து காலை நன்றாக பாதுகாக்கலாம். ஆணி வெடிப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் மூட்டு வலிகளும் பரவாமல் பாதுகாக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)