

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் உடல் உழைப்பு குறைவாகி, எல்லாம் உட்கார்ந்து செய்யும் வேலை மயமாகி விட்டது. இதனால் 40, 50 வயதில் வர வேண்டிய நோய்கள், உடல் உபாதைகள், 20, 30 வயதிலேயே வந்துவிடுகிறது.
ஆண், பெண் இருபாலருக்கும் பெரும் பிரச்னையாக இருப்பது தொப்பை. இதனால் வயது முதிர்வாக தோற்றம் தருவதுடன் பல நோய்கள் வருவதற்கும் காரணமாக இருக்கிறது. இதை வீட்டிலேயே குறைக்க சில வழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை, சிலவகை ஹார்மோன் குறைபாட்டால் உடல் எடை கூடுவதுடன் தொப்பையும் வந்து விடுகிறது.
* இதை குறைக்க தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க, உடல் வறட்சி வராமல் இருப்பதோடு உடலில் தங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற உதவுகிறது. சீரான இடைவெளியில் தண்ணீர் குடிக்க, உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும்.
* உணவில் அதிகப்படியான உப்பை சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல் அதிகமாக தங்கி விடும். எனவே, அதிகப்படியான உப்பு, சர்க்கரை சேர்ப்பதை குறைக்க வேண்டும்.
* சர்க்கரையும் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. சர்க்கரைக்கு பதில் சிறு குழந்தைகள் எனில் தேனை சேர்க்கலாம். பெரியவர்கள் நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டியை குறைந்த அளவில் உண்ணலாம்.
* தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது அதில் சிறிதளவு பட்டைத் தூளை சேர்த்து கலந்து குடிக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.
* தினமும் உணவில் தயிரை சேர்த்து வர அதிலுள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால் எடை குறைவதோடு, தொப்பையும் குறையும்.
* க்ரீன் டீ குடித்து வர தொப்பை குறைவதோடு உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். எலுமிச்சை சாறு, தேனோடு சேர்த்து அருந்த தொப்பை குறையும்.
* பூண்டை பச்சையாக சாப்பிட கொழுப்பு குறைவதோடு வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவும். உடல் கொழுப்புகள் கரைந்து (Belly fat reduction) இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* உணவில் இஞ்சியை சேர்ப்பதால், செரிமானம் சரியாக இருக்கும். கொழுப்பு சேராமல் உடல் எடை, தொப்பை கட்டுக்குள் இருக்கும். இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.
* நீர்காய்களான சுரைக்காய், பூசணி வகைகளை எடுத்துக் கொள்ள தொப்பை குறையும்.
* சமச்சீரான உணவு, நடைபயிற்சி, ஜங்க் உணவுகளை தவிர்த்தல் போன்றவை தொப்பை ஏற்படாமல் இருக்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)