

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று பரோட்டா. குறிப்பாக பரோட்டாவை இரவு நேரங்களில் தான் அதிகம் பேர் உண்கின்றனர். முழுக்க முழுக்க மைதாவில் செய்யப்படும் இந்த உணவால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
மைதாவால் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதிலும் இரவு நேரங்களில் மைதா சார்ந்த உணவுகளை சாப்பிடும் போது செரிமானப் பிரச்னை ஏற்படுவது உறுதி.
இந்நிலையில் பரோட்டாவை சாப்பிடுவதால் செரிமான பிரச்னை ஏற்பட்டு, அது பெருங்குடலை கடுமையாக பாதிப்பதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. புற்றுநோய்க்கு இந்தியாவில் தரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க இலவச தடுப்பூசியை அறிமுகம் செய்தது தமிழக அரசு.
ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,097 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் 53,022 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது இரு மடங்காக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாறிவரும் உணவுப் பழக்கமே இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பெண்களிடையே மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
சமீப காலமாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதில் பெருங்குடல் புற்றுநோய் என்பது செரிமான பிரச்னைகளினால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எளிதில் செரிமானமடையும் உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் துரித உணவுகள் மற்றும் மைதா சார்ந்த உணவுகள் நமக்கு பிரச்னையை ஏற்படுத்தி விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
மைதா மாவால் தயாரிக்கப்படும் பரோட்டா மற்றும் பீட்சா போன்ற உணவுகளை இளம் தலைமுறையினர் விரும்பி உண்பதால், பெருங்குடல் புற்றுநோய்க்கு ஆளாவதாக கூறப்படுகிறது. ஆகையால் மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதை பொதுமக்கள் கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஏற்கனவே பரோட்டாவை இரவு நேரங்களில் சாப்பிடுவதால் தூக்கமின்மை, செரிமான கோளாறுகள், உடல் எடையில் மாற்றம் மற்றும் அசிடிட்டி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதில் தற்போது பெருங்குடல் புற்றுநோயும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் பொதுமக்கள், உணவு சார்ந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருந்தால், புற்றுநோய் வருவதை முன்னரே தடுக்க முடியும்.