
செயற்கை சர்க்கரைகள், சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இனிப்பூட்டிகளாகும். இயற்கை சர்க்கரைக்கு மாற்றான இவை குறைந்த கலோரிகள் அல்லது கலோரிகள் இல்லாத மாற்றீட்டை வழங்குகின்றது. ஆனால், அவற்றின் நீண்ட கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஆராய்ச்சியில் தான் உள்ளது.
செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானதா?
பொதுவாக செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. ஆனால், இவற்றையும் அதிக அளவில் பயன்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இயற்கை இனிப்புகள் சில ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குவதுடன் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருப்பினும் சிலவற்றின் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும் என்பதால் செயற்கை சர்க்கரைகள் இயற்கை சர்க்கரைக்கு மாற்றாக உள்ளது.
சர்க்கரையை விட கலோரிகள் குறைந்த அளவு அல்லது பூஜ்ஜியம் அளவில் இருப்பதால் எடை மேலாண்மைக்கு உதவும். இவை ரத்த குளுக்கோஸ் அளவுகளில் அதிகரிப்பை உண்டாக்காது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இனிப்பு உணர்வை வழங்குகிறது. இதனால் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகின்றது.
பொதுவாக அதிக சர்க்கரையை எடுத்துக் கொள்வது பல் சொத்தையை ஏற்படுத்தும். ஆனால், இந்த செயற்கை சர்க்கரைகள் பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும். காரணம் நொதிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் இவற்றில் இல்லாததால் பல் ஆரோக்கியத்தை பாதிக்காது.
செயற்கை சர்க்கரையின் தீமைகள்:
செயற்கை இனிப்புகளின் நீண்ட கால விளைவுகள் குறித்த ஆராய்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் நீண்ட கால விளைவுகள் பற்றி தெளிவான முடிவுகள் இல்லை.
சில ஆராய்ச்சிகள் குடல் ஆரோக்கியம், வளர்சிதை மாற்ற கோளாறுகள், எடை அதிகரிப்பு போன்ற எதிர்மறை தாக்கங்களை குறிக்கின்றது. செயற்கை இனிப்புகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சில ஆய்வுகள் நீண்ட கால பயன்பாடு பக்கவாதம், இருதய பிரச்சனைகள், வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகள் போன்ற சாத்தியமான தொடர்புகளை குறிக்கின்றன.
மேலும் சில ஆய்வுகள் அஸ்பார்டேம், சுக்ரோலோஸ், சாக்கரின் போன்றவை நீண்ட கால எடை மேலாண்மைக்கு உதவியாக இருக்காது என்றும் கூறுகின்றன. சிலருக்கு செயற்கை இனிப்புகள் இன்னும் அதிக இனிப்பை சாப்பிடத் தூண்டும். இது சர்க்கரை உட்கொள்வதை அதிகரிக்க வழிவகுக்கும்.
சர்க்கரை மாற்றுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் செயற்கை இனிப்புகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
செயற்கை இனிப்புகளை அளவோடு பயன்படுத்துவது நல்லது. எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் உள்ள செயற்கை இனிப்புகளின் அளவைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்' என்பதை மறக்க வேண்டாம்.
மொத்தத்தில் உடல்நலக் குறைபாடுகளை கருத்தில் கொண்டு ஒரு சிறந்த சுகாதார நிபுணர் அல்லது உணவியல் நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)