
உடலில் மறைமுகமாக அரிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக சுற்றுச்சூழல் உள்ளது. சுற்றுச்சூழலில் காற்றில் ஏற்படும் மாசு காரணமாக சருமத்தில் அரிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகள் மிகுந்த சென்னை, கோவை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் மக்களுக்கு சருமம் சார்ந்த அரிப்பு ஏற்படுவது சாதரணமாக உள்ளது. இதை தவிர்த்து வேறு சில தினசரி பழக்கங்களினால் ஏற்படும் அரிப்பிற்கான காரணங்களை அறிந்துக்கொள்வோம்.
1. உடை தூய்மை:
உடலை தூய்மையாக வைத்துக்கொண்டால் சரும பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். அதுபோல உடைகளையும் தினசரி துவைத்து பயன்படுத்துவதன் மூலம் அரிப்பில் இருந்து விடுபடலாம். துவைக்கும் துணிகளில் சோப் துகள்கள் வெளியேறும் அளவிற்கு நன்கு அலசவேண்டும். துணிகளில் மறைமுகமாக ஒட்டிக் கொள்ளும் சோப் துகள்கள் உடலில் படும்போது ஒவ்வாமையை உண்டாக்கி அரிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
2. சூடான அல்லது குளிர்ந்த தண்ணீர் :
மிகவும் குளிர்ந்த தண்ணீர் அல்லது மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்த்துவிடுங்கள். இவை உடலில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை வெளியேற்றி சருமத்தை அதிகம் உலர வைக்கிறது. இதனால் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெயும் காய்ந்துவிடும். இதன் விளைவால் தோலில் அரிப்பு ஏற்படுகிறது. எப்போதும் அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளிக்க பழகிக்கொள்ளுங்கள்
3. சோப்புகள்:
சருமத்தை அதிகம் உலரவிடும் சோப்புகளை குளிக்க பயன்படுத்தாமல், Ph அளவுகளை பராமரிக்கும் சோப்புகளை பயன்படுத்த வேண்டும். சோப்புகளை குளிக்கும்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகப்படியாக சோப்புகளை பயன்படுத்தினால் உடலில் உள்ள இயற்கையான எண்ணெய் நீக்கப்படும். இதனாலும் சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படுகிறது.
4.முகத்தினை அடிக்கடி தொடுதல்:
எப்போதும் முகத்தில் கை வைத்துக் கொண்டிருப்பது, கையின் மூலம் வைரஸ்களை முகத்தில் பரவ விடுவதற்கு காரணமாக இருக்கும். கைகள் பல பல வேலைகளுக்கு பயன்படுகிறது ,பல இடங்களில் கைகளால் தொட்டு பல வேலைகள் செய்கிறோம். தொடுதல் மூலம் கைகள் எப்போதும் பாக்டீரியா மற்றும் வைரஸ் அணுகலுக்கு தயாராக உள்ளது. கைகளை சரியாக கழுவாமல் அடிக்கடி முகத்தினை தொடுவதால் முகத்தில் லேசான அரிப்பு ஏற்படுகிறது.
5. அழுக்கு தலையணைகள்:
பொதுவாக தலையணைகளில் நமது தலையில் உள்ள எண்ணெய் பசையும் முகத்தில் தடவி இருக்கும் கிரீம்களும் உறிஞ்சப் படுகின்றன. இவைகள் தலையணைகளில் பிசுபிசுப்பான தன்மையை ஏற்படுத்துகின்றன. முகம் மற்றும் தலையில் உள்ள கிருமிகளும் அதில் ஒட்டிக்கொள்கின்றன. இதனால் தலையணையில் புரண்டு படுக்கும்போது அந்த எண்ணெய் பசைகள் முகத்தில் ஒட்டிக்கொண்டு அரிப்பினை ஏற்படுத்துகிறது.
6. ஆடைகள்:
சிலவகை ஆடைகள் தோலில் படும்போது ஒவ்வாமை உடனடியாக ஏற்படுத்துகின்றன. நைலான் மற்றும் இறுக்கமான இழைகளை கொண்ட ஆடைகள் தோலின் சுவாசத்தை தடை செய்கின்றன. இதனால் அதிகப்படியான வியர்வை உண்டாகி வெளியேற முடியாமல் சருமத்தில் உப்பாக படிந்துவிடுகின்றன. இதில் அரிப்பை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி தங்களது வேலைகளை காட்டிவிடுகின்றன.
7. சீரம் அல்லது கிரீம்:
ஒரு சில சீரம்கள் சிறிய அளவில் ஆசிட் மூலங்களை கொண்டுள்ளன. அவை சருமத்தை வெளிர வைக்கும் நோக்கத்தில் செயல்படும்போது, இறந்த செல்களை வெளியேற்றும் பணிகளை செய்கின்றன. அப்போது சருமத்தில் அரிப்பு ஏற்படும். இதை தவிர்க்க சீரம் பயன்படுத்தும்போது மாய்ஸ்சைர்களை பயன்படுத்த வேண்டும்.