மனிதனாக பிறந்த அனைவருக்கும் கண், மூக்கு, வாய், கை, கால் என்று அனைத்து உறுப்புகளும் இருக்கும். இருப்பினும் இந்த உறுப்புகளில் சிலருக்கு வித்தியாசம் இருக்கும். அது என்னவென்றால் சிலருக்கு கால் கட்டை விரல் பக்கத்தில் இருக்கும் விரல் நீண்டதாக இருக்கும். இதன் காரணமாக அவர்களை யாருக்கும் அடங்காதவர் என்று சொல்வார்கள்.
அதேபோல் சிலருக்கு கைகளில் ஆறு விரல் இருக்கும், அதனை கண்டு அதிர்ஷ்டம் என்று சிலர் சொல்லுவார்கள், சிலர் துரதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். இந்த ஆறாம் விரல் அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்பதைப் பற்றி நம்மால் கூற இயலாது. இந்த ஆறாவது விரல் வரக் காரணம் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்...
ஒரு மனிதனுக்கு கையில் அளவுக்கு அதிகமான விரல்கள் இருந்தால் அதனை Polydactyly என்று சொல்வார்கள். இந்த விரல்களின் அமைப்பை நுண்ணியமாக பார்க்கும்போது, நமது சுண்டு விரலுக்கு பக்கத்தில் அல்லது கட்டை விரலுக்குப் பக்கத்தில் கூடுதலாக விரல் இருக்கலாம்.
பெரும்பாலும் கட்டைவிரலை ஒட்டியே ஆறாவது விரல் வளரும். சிலருக்கு ஆறாம் விரல் முழுவதுமாக வளர்ந்து இருக்கும். இதனை மற்ற விரல்கள் போல அவர்களால் மடக்கி நிமிர்த்த முடியும்.
சமயத்தில் இந்த விரல் அவர்கள் செய்யும் அன்றாட பணிக்கும் பயன்படும். சிலருக்கு ஆறாம் விரல் பாதி வளர்ந்து இருக்கும். இந்த விரலை மற்ற விரல்கள் போல அவர்களால் இயக்க இயலாது. மேலும் சிலருக்கு மிகச் சிறிய எலும்பு வளர்ச்சி அற்ற ஆறாம் விரல் இருக்கும். சிறு சதை வளர்ச்சிபோல காணப்படும். இது அடுத்தவர்கள் கவனத்தை ஈர்க்காத அளவுக்கு சிறிதாக இருக்கும்.
கைகளில் ஆறுவிரல் வருவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மரபணு தான். அதாவது மரபு ரீதியாக ஒருவருக்கு இந்த ஆறாம் விரல் (Polydactyly) வருகிறது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தாத்தா, பாட்டி, தந்தை, தாய் இவர்களில் யாருக்காவது கைகளில் கூடுதலாக விரல்கள் இருந்தால், அவர்கள் பிள்ளைகளுக்கும் கைகளில் கூடுதலாக விரல்கள் வருமாம்.
மரபு சார்ந்த யாருக்கும் இந்த பிரச்சனை இல்லை என்றால், பிறக்கும் போதே அவர்களுக்கு ஏதாவது உடலில் குறைபாடு இருந்திருக்கலாம். ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு ஏற்படுகிறது.
இந்த ஆறாம் விரல் சுண்டு விரலில் இருந்தால் எந்த ஒரு இடையூறும் இருக்காது, அதுவே கட்டை விரலுக்கு பக்கத்தில் இருந்தால் அது சில இடையூறுகளை கொடுக்கலாம். ஆக இந்த விரலை அகற்ற வேண்டும் என்றால், அதற்கும் அறுவை சிகிச்சை முறைகள் இருக்கிறது. மருத்துவரை அணுகி அந்த அறுவை சிகிச்சையை நீங்கள் செய்துகொள்ளலாம்.