
பள்ளிக்கூடத்தில் தூங்கும் பையனைப் பார்த்து சில சமயம் வகுப்பின் வாத்தியார் சாக்பீஸ் துண்டால் அந்தப் பையனின் முகத்தைக் குறி பார்த்து அடிப்பது உண்டு. அப்படியும் மீறி தொடர்ந்து அவன் தூங்கினால் வகுப்பை விட்டு வெளியே போ என்று சொல்வதுண்டு.
கல்லூரியில் படிக்கும் பொழுது பேராசிரியர் அந்த மாணவனிடம் “நீ முகத்தைக் கழுவி கொண்டு வா “ என்று சொல்வதுண்டு.
அலுவலகப் பணியில் இருப்பவர்கள் தாம் அமர்ந்து இருக்கும் இருக்கையிலே சிறிது நேரம் கண்ணயர்வார்கள்.
வேலைப் பளு இல்லாதவர்கள் மன மகிழ் மன்றம் போய்ச் சிறிது நேரம் உறங்கி விட்டு பிறகு தன் வேலைகளைக் கவனிப்பார்கள்.
இது மாதிரியான நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது நாடறிந்த பழமொழி.
இது ஏன் நடக்கிறது என்று என் பெற்றோர்களிடம் கேட்டபொழுது ஏதோ பெரியவங்க சொல்லி இருக்காங்க . விளக்கம் தெரியாது என்றார்கள்.
நீண்ட நாளாக மனதில் இருந்த இந்த வினாவுக்குக் கல்லூரியில் படிக்கும் போது Organic Chemistry பேராசிரியர் விளக்கம் அளித்தார்.
நமது உடலில் சுவாசிக்கபடும் ஆக்சிஜனையும், சாப்பிட்டபின் அதிலருந்து கிடைக்கப் பெறும் சத்துப் பொருள்களையும் இரத்தம் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்கிறது.
எந்தெந்த இடத்துக்கு எவ்வளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படும் என்பது அந்தந்த பாகங்களுக்குத் தேவையான ஆக்சிசன் மற்றும் சத்துப் பொருள்களைச் சார்ந்தே அமைந்துள்ளது.
மனித உடலில் உள்ள 5 லிட்டர் இரத்தம் தான், உடலைப் பாதுகாத்து வருகிறது.
இருதயம் சுருங்கி விரிவதால் உடலின் பல்வேறு பாகங்களுக்கு செல்லும் இந்த 5 லிட்டர் இரத்தத்தில் ⅓ பாகம் கல்லீரலுக்கும், ¼ பாகம் சிறுநீரகத்துக்கும்,1/6பாகம் மூளைப் பகுதிக்கும் தேவைப்படுகிறது.
மிகுந்துள்ள இரத்தம் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
ஆனால் இவ்வாறு தேவைப்படும் இரத்தம் அவரவர் மேற்கொள்ளும் செயல் பொறுத்து மாறுபாடு அடையும்.
நாம் உணவு சாப்பிட்ட பிறகு அதைச் செரிமானம் செய்வதற்கும், உண்ட உணவில் உள்ள சத்துப் பொருளை பிரித்து எடுப்பதற்கும் அதிக அளவில் இரத்தம் குடலின் சுற்றுப்புற தசைகளுக்கு அனுப்பப்படுகின்றது.
இதனால் மூளைப் பகுதிக்குச் செல்லும் இரத்தத்தின் அளவில் குறைவு ஏற்படுகிறது.
மூளைக்குச் செல்லும் இரத்தம் குறைவு படுவதால் ஒரு வித அலுப்பு ஏற்பட்டுத் தூக்கம் கொள்ள அதுவே தூண்டுதலாக அமைகின்றது.
என்ன வாசகர்களே இப்போது விளக்கம் திருப்தி தானே!