மீண்டும் அச்சுறுத்த வரும் பாக்டீரியா கிருமி - ‘ஸ்க்ரப் டைபஸ்’ - அறிகுறிகள் என்ன?

Scrub typhus
Scrub typhus
Published on

கண்ணுக்கு புலப்படாத பலவகையான பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் மனிதனுக்கு நோய்களை உருவாக்குகின்றன. இந்த வரிசையில் தற்போது அச்சுறுத்தலாக இருப்பது ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்னும் ஒரு வகை பாக்டீரியா கிருமி.

சிக்கர் பூச்சி எனப்படும் பூச்சி கடிப்பதன் மூலம் இந்நோயை மேற்கண்ட பாக்டீரியா கிருமிகள், மனிதர்களுக்கு பரப்புகின்றன. உலக அளவில் ஆஸ்திரேலியாவில் இதன் பாதிப்பு கடுமையாக இருந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த கிருமி பரவி இந்தியா மற்றும் பர்மா பகுதிகளில் 2-ம் உலகப்போரின்போது ஏராளமான மரணங்களை ஏற்படுத்தியதாக தகவல்கள் உள்ளன. இந்திய அளவில் இமாசல பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் இந்த கிருமியின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா!
Scrub typhus

இது மனிதர்களை தாக்கும்போது கடுமையான காய்ச்சல் ஏற்படுவது மிகவும் பொதுவான அறிகுறியாகும். மேலும், மூச்சுத்திணறல், இருமல், குமட்டல், வாந்தி, தசை இறுக்கம் மற்றும் தலைவலியும் காணப்படும்.

இதன் பாதிப்புகள் தெரிந்த உடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தவறினால், கடுமையான சுவாச கோளாறு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, மூளைக்காய்ச்சல் மற்றும் இதய செயலிழப்பை ஏற்படுத்தும். மக்களுக்கு பொதுவாக தெரிந்த மலேரியா, டெங்கு, டைபாய்டு மற்றும் லெப்டோஸ்பபைரோசிஸ் போன்ற கடுமையான நோய்க்குறிகள் கொண்ட நோய்களுக்கு இணையாக ஸ்க்ரப்டைபஸ் பாதிப்பு உள்ளதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. உடல்வலி, தலைவலி, கருப்பு நிற கொப்புளம் உடலில் காணப்பட்டு 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள், டாக்டர்கள். தொற்று பாதிப்புக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், ஒரு ஆறுதலான தகவல் என்னவென்றால் இந்த ஸ்க்ரப்டைபஸ் நோய்த்தொற்று இதற்கு முன்பு ஏற்படுத்திய பாதிப்பைவிட, தற்போது குறைந்த அளவிலான பாதிப்புகளே தெரியவருகின்றன என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?
Scrub typhus

ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு அசித்ரோமைஸின் (azithromycin), டாக்ஸிசைக்ளின் (doxycyline), ரிஃவேம்பிசின் (rifampicin) ஆகிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது. நோய் எதிர்ப்பு மருந்துகளைக் கொடுக்கும்போது 48 மணிநேரத்துக்குள் நோயாளி குணமடைந்துவிடுவார். தொடர்ந்து பத்து நாட்களுக்கு கொடுத்தால் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.

கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகளை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் தொற்று பாதித்த மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதையும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் மட்டுமே இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com