சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா? இந்த பதிவு மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியாவில் தாவர அடிப்படையிலான உணவுகளை மக்கள் சாப்பிட விரும்புவதற்கு அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு முதன்மைக் காரணமாக உள்ளது. இன்றைய காலத்தில் மோசமான உணவுப் பழக்கங்களால் பல்வேறு விதமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் சில வகையான புற்று நோய்களின் தாக்கங்களிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.
தாவர அடிப்படையிலான உணவுகளில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், உடலில் அவ்வளவு எளிதில் கொழுப்பு சேர்வதில்லை. இது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் வெஜிடேரியன் உணவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உணவகங்களில் அதிகமான வெஜிடேரியன் வகைகளை விற்பனை செய்கின்றனர். இதன் மூலமாகவும் அவற்றை தேர்வு செய்து மக்கள் அதிகமாக சாப்பிடுகின்றனர்.
இந்தியாவில் தாவர அடிப்படையிலான உணவுகளை பிரபலப்படுத்துவதில் சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்களின் பங்கு அதிகம். இன்றைய டிஜிட்டல் உலகில் வெஜிடேரியன் உணவுகளின் முக்கியத்துவம் சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகம் பரப்பப்படுகிறது. குறிப்பாக டிஜிட்டல் இன்ஃப்ளுயன்சர்கள் அவர்கள் உண்ணும் வெஜிடேரியன் உணவுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, பலருக்கு அவற்றை முயற்சிக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுகிறது. இது மக்கள் தங்களின் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள பெரிதளவில் உதவுகிறது.
மாமிசங்கள் சாப்பிடுவதால் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனிதர்கள் தங்கள் சாப்பிடும் விலங்குகளை உற்பத்தி செய்வதால், கிரீன் ஹவுஸ் வாயு வெளியேற்றம், காடழிப்பு மற்றும் நீர் மாசுபாடு போன்றவை ஏற்படுகிறது. இதுவே தாவர அடிப்படையிலான உணவுகளில் இத்தகைய கார்பன் வெளியேற்றக் காரணிகள் இருப்பதில்லை. இதுமட்டுமின்றி சில நபர்கள் வெஜிடேரியன் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மூலமாக விலங்குகளின் நலனை மேம்படுத்த முடியும் என நம்புகிறார்கள். இதனால் விலங்குகள் கொல்லப்பட்டு உணவாக எடுத்துக் கொள்வது குறைக்கப்படுகிறது.
இத்தகைய காரணங்களாலேயே இந்தியாவில் தற்போது மக்கள் வெஜிடேரியன் உணவுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக, இது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதால், முடிந்தவரை சைவ உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். குறிப்பாக, தாவர அடிப்படையிலான உணவுகளை.