Science of Sleeping: தூக்கம் நம் ஆரோக்கியத்திற்கு எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா? 

Sleeping Women
Science of Sleeping

தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் மிகவும் அவசியமான செயல்முறையாகும். இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. ஆனால் நாம் முறையாகத் தூங்காதபோது இது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கிறது. இந்தப் பதிவில் தூக்கத்தின் அறிவியலைத் தெரிந்து கொண்டு அது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எப்படி பங்காற்றுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்வோம் வாங்க. 

பழுதுபார்க்கும் செயல்பாடுகள்: தூக்கத்தின்போது உடல் தன்னைத்தானே பழுது பார்த்துக்கொள்கிறது. வளர்ச்சி ஹார்மோன் வெளியேறுவது, திசுக்களை சரி செய்தல் மற்றும் தசை வளர்ச்சி போன்றவை தூக்கத்திலேயே நடைபெறுகின்றன. தூக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கி, நோய்த் தொற்றுகளுக்கு எதிரான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பசியின்மை, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு தூக்கம் மிக மிக அவசியம். 

நினைவாற்றல்: ஒருவரின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மூளையில் இருக்கும் நீண்டகாலத் தகவல்களை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் தூங்கும்போது மூளை அன்றைய தினத்தின் நினைவுகள் மற்றும் அனுபவங்களை ஒழுங்குபடுத்துகிறது. இந்த செயல்முறையால் நமது கற்றல் திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றலும் மேம்படுகிறது. 

மூளை ஆரோக்கியம்: தூக்கம், மூளை ஆரோக்கியம் மற்றும் மனநலத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும். தூக்கத்தின்போது மூளையில் நாள் முழுவதும் சேரும் தேவையில்லாத விஷயங்கள் வெளியேற்றப்படுகின்றன. எனவே அறிவாற்றல் செயல்பாடு, கவனம் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆகியவை பராமரிக்கப்பட போதுமான தூக்கம் முக்கியமானது. நாள்பட்ட தூக்கமின்மை மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால், தினசரி முறையாகத் தூங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளும், கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களும்!
Sleeping Women

இதய ஆரோக்கியம்: இதயம் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் அவசியம். தூக்கத்தின் போது ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு இயற்கையாகவே குறைந்து, இதயம் கொஞ்சம் ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. நாள்பட்ட தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கத்தின் தரம் போன்றவற்றால் ரத்த அழுத்தம் அதிகரித்து, வீக்கம் மற்றும் இதய நோய்கள் போன்றவை ஏற்படலாம். நல்ல தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது மூலமாக இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ முடியும். 

மேலும் தூக்கம் என்பது பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் எந்த அளவுக்கு உழைக்கிறோம் என்பது முக்கியமோ, அதேபோல எந்த அளவுக்கு ஓய்வு எடுக்கிறோம் என்பதும் முக்கியமாகும். எனவே தினசரி முறையாகத் தூங்கினால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com