
கடைகளில் நாம் வாங்கும் பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய ஸ்டிக்கர்களைப் பலரும் கவனித்திருப்போம். சிலர் அவை பழத்தின் விலை அல்லது அது எங்கிருந்து வந்தது என்பதைக் குறிக்கின்றன என்று நினைக்கலாம். பளபளப்பான அந்த ஸ்டிக்கர்களைப் பார்த்தவுடன், இப்பழம் தரமானதாக இருக்கும் என்றும், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் என்றும் ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே. ஆனால், உண்மையில் இந்த ஸ்டிக்கர்கள் எதற்காக ஒட்டப்படுகின்றன, அவை எதை நமக்கு உணர்த்துகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
உண்மையில், பழங்களில் ஒட்டப்படும் இந்த ஸ்டிக்கர்களுக்கும் அவற்றின் விலைக்கோ அல்லது அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதற்கோ நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், அவை நமது ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. அந்த ஸ்டிக்கர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களை வைத்து, நாம் வாங்கும் பழம் இயற்கையான முறையில் விளைந்ததா, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதா அல்லது மரபணு மாற்றப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும் என்பது ஆச்சரியமான தகவல்.
நீங்கள் வாங்கும் ஆப்பிள் அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களில் 4 இலக்க ஸ்டிக்கரைப் பார்த்தால் சற்று எச்சரிக்கையாக இருங்கள். அந்த எண்கள் பெரும்பாலும் 4026 அல்லது 4987 போன்ற 4 என்ற எண்ணில் தொடங்கினால், அப்பழங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவை என்று அர்த்தம். இவை விலை மலிவாக இருக்கலாம், ஆனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது.
சில பழங்களின் ஸ்டிக்கர்களில் 5 இலக்க எண்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த எண்கள் 8 என்ற எண்ணில் தொடங்கினால் (உதாரணமாக 84131 அல்லது 86532), அப்பழங்கள் மரபணு மாற்றப்பட்டவை என்பதை குறிக்கிறது. இவை இயற்கையான முறையில் விளைவிக்கப்படாமல், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். ரசாயனங்கள் கலந்த பழங்களை விட இவை சற்று விலை அதிகமாக இருந்தாலும், இவற்றிலும் சில பாதகமான விளைவுகள் இருக்கலாம்.
அதே நேரத்தில், சிறந்த தரமான பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களில் 5 இலக்கங்கள் இருக்கும். ஆனால், அவை 9 என்ற எண்ணில் தொடங்கும் (உதாரணமாக 93435). இப்படிப்பட்ட பழங்கள் எந்தவிதமான ரசாயன உரங்களோ அல்லது பூச்சிக்கொல்லிகளோ பயன்படுத்தாமல், முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை. இவை மற்ற பழங்களை விட சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இவை மிகச் சிறந்தவை.
இனி நீங்கள் பழங்கள் வாங்கும்போது, அதன் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் உள்ள எண்களை கவனமாகப் பாருங்கள்.