
இரவு நேரங்களில் நாம் உறங்கும் போது பல்லும், இதயமும் ஒரே மட்டத்தில் அமைவதால் பல்லுக்கு செல்லும் இரத்தத்தின் அளவானது நிற்கும் நிலையில் இருப்பதை விட உறங்கும் வேளையில் அதிகமாகிறது. ஆழமான பற்சொத்தையால் பாதிக்கப்பட்ட பல்லுக்கு செல்லும் இந்த அதிகப்படியான இரத்த ஓட்டம் அங்குள்ள பற்கழுக்குள் அழுத்தத்தை அதிகமாக்கி வீக்கமடையச் செய்கிறது. இதனால் தான் கடுமையான பல்வலி உண்டாகிறது.
சிலசமயம் நாம் இரவில் உண்ணும் உணவும் பற்சொத்தையில் சிக்கிக் கொண்டு பல்வலியை உண்டாக்குகிறது. இந்த வலியினை கிராம்பு எண்ணெய் தடவுவதன் மூலமோ அல்லது படுத்காமல் எழுந்து உட்கார்ந்து அதீத இரத்த ஓட்டத்தை குறைப்பதன் மூலமோ ஓரளவு வலியைக் குறைக்கலாம். ஐஸ் ஒத்தடமும் வலியிலிருந்து நிவாரணம் தரும். ஆழமான சொத்தை பல்வலியால் பாதிப்படைந்த பற்கழினை வேர் சிகிச்சை (Root canal treatment) முழுவதுமாக வெளியேற்றி விட்டு செயற்கை ரப்பர் (Gutta percha) எனும் பொருளைக் கொண்டு பல்லின் வேர்ப் பகுதி சீல் செய்யப்படுகிறது. இந்த வேர் சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.
பால் பற்களை பாதுகாப்பது எப்படி?
பால் பற்கள் விழுந்து நிலையான பற்கள் முளைப்பது வரிசைக் கிரமமாக நடக்கிறது. அதனால் உரிய காலம் வரை பால் பற்களை பாதுகாப்பது அவசியம். பால் பற்களில் சொத்தை ஏற்பட்டு அதை அடைக்காமல் விடுவது பற்களை இழக்க வழி வகுக்கும்.
உரிய காலத்திற்கு முன்பாக பால் பற்கள் விழுந்து விட்டால் இயற்கையான உந்துதலால் அதன் பின்னால் உள்ள கால் பல் முன்னால் நகருகிறது. இதனால் விழுந்த பல்லின் இடத்தில் வரவேண்டிய நிலையான பல்லுக்கு இடம் இல்லாமல் போகிறது. முன்னால் நகர்ந்த பல்லை அதன் இடத்திற்கு தள்ளுவதாலும், க்ளிப்பை உபயோகிப்பதாலும் வரவேண்டிய நிலையான முன்கடைவாய்ப் பல்லை பின்னால் தள்ளி தனியான பல் சீரமைப்பு கருவியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதனால் பல் வரிசை சீராவதோடு நன்கு கடித்து சாப்பிடவும் முடிகிறது.
ஈறுகளில் உண்டாகும் வீக்கத்திற்கு என்ன சிகிச்சை?
திரும்ப திரும்ப பற்களில் அழுக்கும், காறையும் படிவதால் பற்களைச் சுற்றியுள்ள ஈறுகள் வீங்கி விடுகின்றன. பற்களை க்ளீன் செய்தாலும் அப்படியே ஈறுகளில் படிந்திருக்கும். சொத்தை பல் உண்டாவதாலும், பல்லை நாம் பின் அல்லது டூத் பிக் கொண்டு குத்திக் கொண்டோ இருந்தாலும் ஈறுகளில் வீக்கம் உண்டாகும்.
இத்தகைய வீங்கி பெரிதான ஈறுகளை மரத்துப் போகும் ஊசி போட்டு ஜிஞ்சைவெகடமி என்ற அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ஒரு வாரத்தில் ஈறுகளில் மேல் பக்கம் ஆறி ஈறுகள் பழைய வடிவம் பெறும். லேசர் சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
இவை நான் அக்கா பேரனின் பல்வலிக்காக மருத்துவரை பார்க்க சென்ற போது கேட்டு அறிந்து கொண்டேன்.