பொதுவாக, நாம் சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடுவது குருமா, சப்ஜி, பன்னீர் பட்டர் மசாலா, முட்டை கிரேவி மற்றும் சில நான்-வெஜ் அயிட்டங்களில் ஏதாவது ஒன்றாக இருக்கும். சப்பாத்திக்கு வெல்லம் சேர்த்து எப்பவாவது சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லை என்றால் ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்க. அந்த கூட்டணியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளைக் கேட்டால் அடிக்கடி அதை சாப்பிட விரும்புவீங்க. சரி, அப்படி அதுல என்னென்ன நன்மைகள் இருக்குன்னு இந்தப் பதிவில் பார்ப்போம்.
முழு கோதுமையை அரைத்து, அந்த மாவில் சப்பாத்தி செய்யும்போது கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின், மினரல்கள் கிடைகின்றன. மேலும், அதிலுள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேடும், வெல்லத்திலுள்ள இயற்கையான இனிப்புச் சத்தும், இரும்புச் சத்தும் சேரும்போது, அவை நம் உடலை நாள் முழுக்க சக்தியுடையதாக ஆக்குகின்றன.
சப்பாத்தி, வெல்லம் இரண்டிலுமுள்ள நார்ச்சத்துக்கள் சீரான செரிமானத்துக்கும், ஜீரணமான ஊட்டச்சத்துக்கள் நல்ல முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கும் உதவி புரிகின்றன. மேலும், மலச் சிக்கல் வருவதையும் தடுக்கின்றன.
அதிகளவு இரும்புச் சத்தை தன்னுள் கொண்ட வெல்லமானது, சப்பாத்தியுடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தைக் கொடுத்து, இரும்புச் சத்துக் குறைபாட்டை நீக்குகிறது. இதனால் அனீமியா நோய் வருவதையும் தடுக்கிறது.
வெல்லத்திலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை நீக்கி, உடலின் முழு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, இயற்கையான இனிப்புச் சத்தை உள்ளடக்கிய வெல்லத்தை உபயோகிக்கும்போது இரத்த சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படுகிறது. சப்பாத்தியிலும் இனிப்பு சுவை கூட்டப்படுகிறது.
ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வெல்லத்தை சேர்க்கும் முன் மருத்துவர் ஆலோசனையை பெறுவது நலம்.