ஒத்தடம் கொடுப்பதற்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

Fomentation
Fomentationhttps://www.tripadvisor.in

ரு நோயை குணப்படுத்த மருத்துவத் துறையில் எத்தனையோ சிகிச்சை முறைகளை மருத்துவ நிபுணர்கள் நீண்ட காலமாகக் கையாண்டு வருகிறார்கள். அதில் ஒத்தடம் கொடுப்பது (Fomentation) என்பதும் ஒரு வகை சிகிச்சை முறை. பாரம்பரிய வைத்தியசாலைகளில் இது காலங்காலமாக இருந்து வருகிறது.

நம் உடல் உறுப்புகளில் எங்காவது ஓர் இடத்தில் நோய் மையங்கொண்டிருந்தால் வெப்பத்தாலோ அல்லது குளிர்ச்சியினாலோ ஒற்றுதல் மூலம் அதை அகற்றுவது என்ற பொருளில் அந்த வைத்தியத்திற்கு ஒற்றடம் என்று வந்தது. சருமப் பகுதி இறுக்கமாக இருந்தாலோ அல்லது சிதைந்து இருந்தாலோ அந்த இடத்தைச் சூடோற்றுவதன் மூலம் சதைகளின் பிடிப்பை நீக்குகிறார்கள். இதற்கு வெந்நீர் ஒத்தடம் உதவுகிறது. இது இல்லாமல் இரத்த குழாய்களை சரி செய்ய ஐஸ் ஒத்தடத்தைப் பயன்படுத்துகிறார்கள். சித்த மருத்துவத்தில் மூலிகைகளைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதும் உண்டு.

மூட்டு நோய்களை குணப்படுத்த வெந்நீர் ஒத்தடம், துப்ரா ரெட் ரேஸ் மூலம் மூட்டு வலிகளைக் குறைக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் மூட்டு வீக்கம், வலிகளை போக்க பேய்மிரட்டி இலையை மண் சட்டியில் போட்டு விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கிறார்கள். கீழ் வாதம், முடக்குவாதம் ஆகிய நோய்களுக்கும் இதனை பயன்படுத்துகிறார்கள்.

மூட்டு நோய்களுக்கு எருக்கன் இலையை வேப்ப எண்ணெயில் வதக்கி வலியுள்ள இடத்தில் ஒத்தடம் தருகிறார்கள். இதனால் வீக்கம் குறைந்து வலிகள் குறைகிறது. ஒத்தடம் கொடுக்கும் போது நோயாளிக்கு மருந்து கொடுத்து அதோடு ஒத்தடமும் கொடுப்பதால் இரண்டும் இணைந்து வேலை செய்கின்றன. ஆகவே ஒத்தடம் என்பது வெளிப்புறச் சிகிச்சை மட்டுமே. வெறும் ஒத்தடம் மட்டுமே நோய்களை முற்றிலும் குணப்படுத்தாது. இரண்டும் இணைந்தே செயலாற்றுகின்றன.

ஒத்தடம் பல்வேறு நோய்களுக்குத் துணை வைத்தியமாக இருந்து உதவுகிறது. காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது குளிர்ந்த நீரை ஒரு துணியில் நனைத்து நெற்றியில் ஒற்றி எடுப்பதால் காய்ச்சலின் வேகம் தணிகிறது. சிலர் ஐஸ் பேக்கை வைக்கிறார்கள் இது தவறு என்கிறார்கள்.

கண் வலிக்கு சுடுகின்ற சாதத்தில் ஒரு பிடி எடுத்து அதில் விளக்கெண்ணெய் விட்டுப் பிசைந்து ஒரு வெள்ளை துணியில் மூட்டை போலக் கட்டிக் கண்களில் ஒத்திக் கொண்டிருந்தால் கண் வலி நீங்கும். மிதமான சூடு போதும். கண் சிவந்திருந்தால் சோற்றுக் கற்றாழையின் சோற்றை மட்டும் எடுத்து ஒரு துணியில் பொட்டலமாகக் கட்டி ஒத்தடம் கொடுக்க கண் சிவப்பு மாறும்.

தலைவலி மற்றும் எலும்பு வலிகளுக்குக் கருப்பு ஊமத்தையைச் சாறு பிழிந்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி அதில் கற்பூர பொடியைக் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி கோதுமைத் தவிடு ஒத்தடம் கொடுக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
திருமணங்கள் அன்றும் இன்றும் - ஒரு மீள் பார்வை?
Fomentation

நெஞ்சுச்சளி, மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, மூச்சுவிடக் கஷ்டமாக இருத்தல் ஆகிய தொல்லைகளின்போது நீலகிரி தைலம் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க சரியாகும். மூக்கில் இரத்தம் வடிந்தால் ஐஸ் தண்ணீரில் துணியை நனைத்து மூக்கில் ஒத்தடம் கொடுக்க இரத்தம் வருவது நிற்கும்.

அதிக சூட்டினாலோ, தூசு விழுந்தாலோ குழந்தைகளின் கண் இமை வீங்கி விடும். இதற்கு பசும்பாலைக் காய்ச்சி ஒரு வெள்ளை துணியில் அதை நனைத்து அந்த ஈரத் துணியால் காலையும், மாலையும் ஒத்தடம் கொடுக்க கண் வீக்கம் குறையும்.

பாரம்பரிய வைத்தியத்தில் ஒத்தடம் முக்கியமான இடம் பெற்றுள்ளது. நமது முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்து விட்டு சென்ற எத்தனையோ ஒத்தட சிகிச்சை முறைகளை இன்றும் பல கிராமங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். சில வகை நோய்களை குணமாக்கும் எளிய வைத்திய முறை ஒத்தடமாகும். இதை தற்போது ஆங்கில மருத்துவமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒத்தடம் கொடுத்ததும் வலிகள் எப்படி குறைகிறது என்று தெரியுமா? நமது சருமத்துக்கு அடியிலும், தசைகளின் இடையிலும் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இவையே நமக்கு வலியை உணர்த்தும் உறுப்புகளாகும். காயத்தினால் திசுக்கள் அல்லது தசைகளின் செயல் தடைபடுவதால் சில வேதிப்பொருட்கள் தேங்கும் போது நம்மால் வலியை உணர முடிகிறது.

இரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த வேதிப்பொருட்கள் கடந்து செல்ல முடியாமல் வலி நீடிக்கும். சீரான இரத்த ஓட்டம் இருந்தால்தான் ஆக்ஸிஜன் செல்களுக்கும், கழிவுப் பொருட்கள் திசுக்களில் இருந்து இரத்தத்திற்கும் செல்லும். சூடாக ஒத்தடம் கொடுத்ததும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரத்த குழாய் விரிவடைந்து அதிக இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. இதனால் தேக்கமடைந்த வேதிப்பொருட்களும் இடப்பெயர்ச்சி அடைவதால் வலி குறையும். சாதாரண ஒத்தடத்திற்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

தண்ணீர் ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம், தவிட்டு ஒத்தடம் ,உப்பு ஒத்தடம் என ஏராளமான வகை ஒத்தடங்கள் உள்ளன. உடல் உறுப்புக்களும் தசைகளும் போதிய அசைவு இல்லாமல் போகும்போது, உடலில் ஆங்காங்கே தசைகள் முறுக்கிக்கொண்டு, வலியை ஏற்படுத்தும். அவற்றுக்கு எளிய வைத்தியம் ஒத்தடமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com