கோடை காலத்தில் ஏற்படும் நீர் இழப்பு ,வெப்ப அதிர்ச்சி ,செரிமான பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்கும் அருமருந்தாக வெள்ளரி சாறு உள்ளது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் வெள்ளரி சாறு முக்கிய பங்காற்றுகிறது . அந்த வகையில் இவ்வளவு சிறப்பு வாய்ந்த வெள்ளரி ஜூஸ் குடிக்கக் கூடாத ஆறுபேர் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. ஐபிஎஸ் (Irritable Bowel Syndrome - IBS) உள்ளவர்கள்
வெள்ளரியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது வயிற்றில் எரிச்சலூட்டும். குடல் நோய் உள்ளவர்களுக்கு வயிற்று உப்புசம், வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால், இவர்கள் வெள்ளரி சாறு குறைந்த அளவில் குடிக்க வேண்டும்.
2. சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள்
பொட்டாசியம் சத்து வெள்ளரியில் அதிகம் இருப்பதால் சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு பொட்டாசியம் உடலில் அதிகமாக சேரும்போது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே வெள்ளரி சாறு குடிக்க வேண்டும்.
3. இரத்த அழுத்தம் குறைந்தவர்கள் (Low Blood Pressure)
ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை வெள்ளரி சாறுக்கு உண்டு. எனவே, ஏற்கனவே இரத்த அழுத்தம் குறைந்து உள்ளவர்கள் அதிகமாக வெள்ளரி சாறு குடித்தால், தலைசுற்றல் அல்லது களைப்பு ஏற்படலாம் என்பதால் குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்கள் வெள்ளரி சாறை தவிர்க்க வேண்டும்.
4. கர்ப்பிணிப் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் வெள்ளரி சாறை அதிக அளவில் குடித்தால் வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் குறைந்த அளவில் மட்டுமே குடிக்க வேண்டும்.
5. மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்
ரத்தம் சார்ந்த மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் வெள்ளரி சாறு அதிகம் குடித்தால், மருந்துகளின் விளைவுகள் குறையலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே குடிக்க வேண்டும்.
6. உடல் குளிர்ச்சியானவர்கள்
வெள்ளரி சாறு உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டதாக இருப்பதால் , ஏற்கனவே உடல் குளிர்ச்சியாக உள்ளவர்கள் அதிகம் குடித்தால், உடல் மேலும் குளிர்ந்து பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே உடல் குளிர்ச்சியானவர்கள் வெள்ளரி சாறினைக் குடிக்க கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் வெள்ளரி சாறு குடிக்கும்போது குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவரவர் உடல் நிலையை பொறுத்து அளவினை முடிவு செய்து ஆரோக்கிய வாழ்வு பெறுங்கள்.