ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலிக்கும் ஒருவகை தலைவலி ஆகும். இதனால் அதிகப்படியான வலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். ஒற்றைத் தலைவலிக்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும் அதன் தீவிரத்தைக் குறைக்க சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க செய்ய வேண்டியவை:
முதலில் உங்களுக்கு ஒற்றைத் தலைவலிகளை தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருவதை குறைக்க முடியும். சாக்லேட், சீஸ், சிவப்பு இறைச்சி, செயற்கை இனிப்புகள் மற்றும் காஃபீன் போன்ற உணவுகள், ரெட் ஒயின், மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக ஒளி, சத்தம், வாசனை மற்றும் தட்பவெட்ப நிலை காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
ஒவ்வொரு இரவும் 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள். அதேபோல தினசரி ஒரே நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள். வார இறுதி நாட்களில்கூட இதை சரியாகப் பின்பற்றவும்.
வாரத்தில் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். கொழுப்பு, சர்க்கரை மற்றும் அதிக உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
உடலில் போதிய அளவு நீர் இல்லை என்றால் அது ஒற்றைத் தலைவலியைத் தூண்டிவிடலாம். தினசரி 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடித்து நீரேற்றத்துடன் இருங்கள். மேலும் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் காரணமாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படும் என்பதால், அதை நிவர்த்தி செய்வதற்கான நுட்பங்களைப் பயிற்சி செய்யுங்கள்.
தலைவலி அடிக்கடி அல்லது கடுமையாக இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்தால், அதனால் ஏற்படும் குமட்டல் வாந்தியை கட்டுப்படுத்த மருத்துவர் உங்களுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.
இதற்கான மற்ற சிகிச்சைகள் என்று பார்க்கும்போது பிசியோதெரபி, அக்குபஞ்சர் மற்றும் மசாஜ் போன்றவை உள்ளன. தேவைப்பட்டால் இவற்றையும் முயற்சித்து ஒற்றைத் தலைவலி பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
இந்த பதிவு தகவலைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதுதானே தவிர, ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த சிகிச்சை முறையை பின்பற்ற தகுந்த மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று அதற்கான தீர்வைக் காண்பது நல்லது.