ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் ஆகஸ்ட் 4 அன்று தேசிய எலும்பு, மூட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து வயதினருக்கும் வலுவான எலும்புகள் மற்றும் மூட்டுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக 2021ம் ஆண்டில் இந்திய எலும்பியல் சங்கம் (IOA) மூலம் நாடு தழுவிய சுகாதார பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் துணை புரிகிறது எலும்புகள். இவை இல்லாமல் மனிதர்களால் செயல்பட முடியாது. எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். முதுமையில் உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு எலும்புகள் பலவீனமடைவதும் ஒரு காரணம்.
அத்தியாவசிய உடல் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, வைட்டமின் டி குறைவு, அதிக உப்பு சேர்த்த உணவுகள், புகையிலை, மது அருந்துதல் போன்ற பழக்கங்கள், இளம் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களில் கால்சியம் குறைபாடு, சில ஸ்டீராய்டு மருந்துகள், வைட்டமின் கே குறைபாடு ஆகியவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் மோசமடைவதற்கு முக்கியக் காரணங்கள் என்கிறார்கள் ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
தொடர்ச்சியான மூட்டு வலி, விறைப்பு, வீக்கம், குறைந்த இயக்கம், தினசரி செயல்பாடுகளைச் செய்வதில் சிரமம் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு அதிக வாய்ப்பு ஆகியவை எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகளைக் குறிக்கலாம். உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுவாக வைத்திருக்க சில எளிய ஆரோக்கியக் குறிப்புகளைக் காணலாம்.
உங்கள் உணவில் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளான பால் பொருட்கள், கீரைகள் மற்றும் வைட்டமின் டி மூலங்களான சூரிய ஒளி, கொழுப்பு நிறைந்த மீன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதோடு, எலும்பு சிதைவை தடுக்கும் பாதாம், பிஸ்தா, சீஸ், பச்சை காய்கறிகள், காலிபிளவர், முட்டைக்கோஸ், டர்னிப் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள்.
வழக்கமாக, உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும். எலும்பு அடர்த்தி மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த நடை பயிற்சி, ஜாகிங், போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். வாரத்திற்கு மூன்று முறை உடற்பயிற்சி செய்தாலே மூட்டு கோளாறுகள் வருவதை தவிர்க்கலாம். மூட்டு வலி உள்ளவர்களுக்கும் வலி குறையும் என்கிறார்கள் கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
அதிக உடல் எடை மூட்டுகளில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மூட்டு பிரச்னைகளின் அபாயத்தை குறைக்கும். புகைப்பிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவை எலும்புகளை வலுவிழக்கச் செய்து மூட்டுப் பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கும். போதுமான தண்ணீர் குடிப்பது மூட்டு உராய்வு மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. சரியான தோரணை மூட்டுகளில் அழுத்தத்தைக் குறைக்கவும், முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். எனவே, நல்ல தோரணையில் அமருவதை, படுப்பதை கடைபிடிக்கவும்.
அதிகப்படியான மன அழுத்தம் நோய் எதிர்ப்பாற்றலை சிதைத்து, ‘ஆட்டோ இம்யூன்’ வியாதிகளை உருவாக்குவதாக ஐஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆட்டோ இம்யூன்தான் முடக்குவாதத்தை உருவாக்குகிறது. எனவே, மன அழுத்தத்தைக் குறைக்க முயலுங்கள்.
மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பது குறையும். அதனால் எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இதனால் எலும்புகள் பலவீனமடையும், எலும்பு முறிவு வாய்ப்பு அதிகரிக்கும். இதனைத் தவிர்க்க அதிக சத்துள்ள பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டை உணவுகள், குறைந்த கொழுப்புள்ள உணவு முறைக்கு மாற வேண்டியது அவசியம்.