மனிதனின் இயலாமைக்கான முக்கிய காரணம் இதுதான்! அது எது?

Mental health
Mental health
Published on

நம் ஒவ்வொருவரின் மனமும் அற்புதமானது, ஆனால் சிக்கலானது. வித்தியாசமானதும் கூட. ஆனால் நம் அனைவருக்கும் அரசியலமைப்பு சமமான உரிமைகளை கொடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள், உலகளாவிய வளர்ச்சி இலக்குகளை அடைவதில் மனநலத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளன.

நாம் அனைவரும் மன நலம் சார்ந்த அறிவை மனித உரிமையாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவது மிகவும் முக்கியமாகும். மனநல ஆலோசகர்கள் அனைவரும் பொதுமக்களின் மனநலனை மேம்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே உலக சுகாதார அமைப்பின் முன்னுரிமையான விருப்பம் ஆகும்.

இந்தத் துறையில் எடுக்கும் முயற்சிகள் நமது தரமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை. ஆனால் நாம் இன்னும் இதுசார்ந்து போக வேண்டிய தொலைவு அதிகம் உள்ளது.

உடல் நலத்தில் குறைவு ஏற்படும் போது நாம் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் மன நலத்தில் குறைபாடு ஏற்படும் போது அதைப் பற்றி எள்ளளவும் கவலைப்படுவதில்லை. கவலை என்னும் புள்ளியில் தொடங்கும் மனநலக் குறைபாடு மன அழுத்தத்தை கொண்டு வந்து மனச்சோர்வில் கொண்டு போய் விடுகிறது. இந்நிலையில்தான் நாம் அதற்கான சிகிச்சைப் பற்றி நினைக்கவேத் தொடங்குகிறோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, மனித இயலாமைக்கான முக்கிய காரணங்களில் மனச்சோர்வு ஒன்றாகும். மேலும் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே தற்கொலை என்பது மரணத்திற்கான நான்காவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மக்களின் மனநலம் மேம்படுவதால் இவ்வகையான தற்கொலைகளை குறைக்க முடியும். மனிதன், ஆரோக்கியமான மனநலத்துடன் இருந்தால்தான், அவனின் செயல், திறன் பெற்றதாக இருக்கும். அப்போதுதான் சுய நன்மைக்கும், குடும்ப நன்மைக்கும், உலக நன்மைக்கும் அவனால் உதவிகரமாக இருக்க முடியும்.

stress
stress

இந்திய சூழலில் கரோனா தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு, சமூக தொடர்புகள் இல்லாமை, தொலைதூரத்தில் வேலை, நீண்ட காலத்திற்கு வீடுகளில் அடைப்பட்டு இருந்தது போன்றவை பெரும்பாலான இந்தியர்களின் மன நலனையும் பொருளாதார நிலைமையையும் வெகுவாக பாதித்துள்ளன.

இந்திய நிறுவனங்களும் தம் ஊழியர்களின் மன நலனை முக்கியக் காரணியாக மனதில் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களும் மனநல ஆலோசகர்களின் வழிகாட்டுதலுடன் தம்தம் அமைப்புகளின் அன்றாடப் பணிகளை செயல்படுத்தி வருகின்றன.

நல்ல மன ஆரோக்கியம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் இன்றியமையாதது. ஆனால், உலகளவில் எட்டு பேரில் ஒருவர்தான் நல்ல மனநல நலத்துடன் வாழ்கிறார் என்னும் புள்ளிவிவரம் அதிர்ச்சியூட்டுகிறது அல்லவா?

இது அவர்களின் உடல் ஆரோக்கியம், அவர்களின் நல்வாழ்வு, அவர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் போன்றவற்றை பாதிக்கலாம். எதிர்மறையான மனநல நிலைமைகள் இளைஞர்களின் நல்வாழ்வுக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளன. இவை உலகளவில் ஏழு இளம் பருவத்தினரில் ஒருவரை பாதிக்கின்றன. மனச்சோர்வு இளம்பருவ நோய்களுக்கு முக்கிய காரணமாக அறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மூளையின் செயல்திறனை உயர்த்தும் 5 வழிமுறைகள்!
Mental health

மக்களின் மன ஆரோக்கியம் மதிப்பிடப்பட்டு, மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உலக சுகாதார நிறுவனம் அதன் கூட்டாளர்களுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றுகிறது. ஒவ்வொருவரும் தங்களின் மனித உரிமைகளைப் பயன்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான தரமான மனநலப் பராமரிப்பை பெறவும் அவசர நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். நல்ல மன ஆரோக்கியம் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நல்ல மன ஆரோக்கியம் சவால்களைச் சமாளிக்கவும், மற்றவர்களுடன் ஆரோக்கியமான சமூகத் தொடர்பு கொள்ளவும், நம் வாழ்நாள் முழுவதும் செழித்து வளரவும் அனுமதிக்கிறது.

சமூகத்தில் உள்ள மன ஆரோக்கியம் சார்ந்த பாகுபாடுகள் உடனடியாக களையப்படவேண்டும். பள்ளிகள், பணியிடங்கள் போன்ற இடங்களில் பாகுபாடு இல்லாமல் வாழ நம் அனைவருக்கும் உரிமை கிடைக்க வேண்டும். சுதந்திரமாக வாழ்வதற்கும், இணக்கமான சமூகத்தில் இணைவதற்கும் நம் அனைவருக்கும் உரிமை உண்டு.

நல்ல வாழ்க்கையை அனுபவிக்க திடமான மனநலம் அடிப்படையாகும். சமூகத்தில் மனநலச் சேவைகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்வது இன்றியமையாதது. குறிப்பாக, குழந்தைகள் வாழ்க்கையில் மனநல ஆதரவு வளங்களை பெறுவது, பிற்கால வாழ்க்கையில் பெரியவர்களின் ஆரோக்கியம் நல்வாழ்வை உறுதி செய்யும். இதற்கு உலகின் அனைத்து நாடுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மன ஆரோக்கியத்தை ஒரு உலகளாவிய மனித உரிமையாக அங்கீகரிப்பதன் மூலம், மக்கள், அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதிகாரத்தை பெறமுடியும். மக்கள் தங்கள் மனித உரிமைகள் பற்றி இன்னும் முழுமையாக அறியவில்லை என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com