
உங்களில் பலர் கொழுப்பு கல்லீரல் நோய் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மோசமான உணவுகளை சாப்பிடுவது, அதிக வேலை செய்யாமல் இருப்பது கல்லீரலில் கொழுப்பை படியச் கல்லீரலின் செயல்பாட்டை தடுக்கும். இதை தொடக்கத்திலேயே கவனிக்காமல் விட்டால் கல்லீரல் செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கலாம். கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை குணமாக்கும் சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்த முதலில் உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இவற்றிற்கு மாற்றாக பலவிதமான பழங்கள் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், நார் சத்துக்கள், நிறைந்திருப்பதால், கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை படிப்படியாகக் குறைக்க உதவும். இத்துடன் பாதாம் வால்நட் சூரியகாந்தி விதை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இதில் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளன. மேலும், பருப்பு வகைகளை சாப்பிடுவது உடலுக்குத் தேவையான புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.
அடுத்தபடியாக, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இன்றைய காலத்தில் பலர் உடற்பயிற்சி செய்ய விரும்பினாலும், அதை முழு ஈடுபாட்டுடன் செய்யும் நபர்கள் குறைவே. உங்களால் ஜிம்முக்கு போக முடியவில்லை என்றாலும், நடப்பது, ஓடுவது, நீச்சல் போன்ற பயிற்சிகளை வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்களாவது செய்யுங்கள். இத்துடன் எடை தூக்குதல், யோகா போன்ற பயிற்சிகள் செய்வது கொழுப்பு கல்லீரல் பாதிப்பில் இருந்து குணமடைய உதவும்.
நீங்கள் உடல் எடை அதிகமாக இருக்கிறீர்கள் என்றால் அதை முதலில் குறைக்க முற்படுங்கள். கடுமையான உணவுக் கட்டுப்பாடு, தீவிரமான உடற்பயிற்சி போன்றவற்றைத் தவிர்த்து, மாதத்திற்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை எடையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. உங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு மருத்துவரை அணுகி கட்டாயம் ஆலோசனை பெறவும்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் குறைக்க நீங்கள் முதலில் நிறுத்த வேண்டியது மதுப்பழக்கத்தைதான். ஏனென்றால், மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை உங்களால் மது அருந்துவதை முழுமையாக விட முடியாது என்றால் மிதமாக அருந்தவும்.
இத்துடன் மருத்துவ சிகிச்சைக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருக்கிறது என சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். இதன் மூலமாக அந்த நோயின் தாக்கத்தைப் புரிந்து கொண்டு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.