எதுவும் இயங்கினால் மட்டுமே அதன் உயிர்ப்பும், பயனும் உணரப்படும்! அது உடலாக இருந்தாலும் சரி! எந்திரங்களாக இருந்தாலும் சரி! நம் உடலில் இயக்கம் சிறிதாக நின்று போனாலே நாமும் நம் குடும்பமும் பாதிக்கப்படுகிறோம்! ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியைச் செவ்வனே செய்து வந்தால்தான் நம்மால் மகிழ்வுடன் நடமாட முடிகிறது! எந்திரங்கள் இயக்கத்தை நிறுத்தி விட்டால், ’ஸ்க்ராப்’ என்று ஓரங்கட்டி விடுகிறோம்! அந்த ஸ்க்ராப்புக்காவது ஒரு விலை உண்டு! மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் நிலையுண்டு! ஆனால் நம் இயக்கம் முழுதுமாக நின்று போனால் என்ன நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!
அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது!
அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு
நீங்கிப் பிறத்தல்!…
என்று ஔவையார் அந்தக் காலத்திலேயே சொல்லி விட்டார்!
இந்த அரிய பிறவியை எத்தனை பேர் அனுபவித்து வாழ்கிறோம்? என்ற கேள்விக்கு விடை, பலவாறாக இருக்கிறது! வெளி நாட்டுக்காரர்களை நலம் விசாரித்தால் ‘ஐ ஆம் பைன்!’ (I am Fine!) என்றே ஏறத்தாழ எல்லோருமே சொல்கிறார்கள்! மருத்துவ மனையில் ‘பெட்’ டில் படுத்து சிகிச்சை பெறுபவர்கூட ‘ஃபைன்’ என்றே சொல்கிறார்!ஆனால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்திலிருந்து மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு விட்டு ஹாயாகத் தூங்கும் நம் சகோதரர்களோ ‘எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டால், ஈன சுரத்தில் ‘ஏதோ இருக்கிறேன்!’ என்கிறார்கள்! ’எனக்கென்ன? மிக நன்றாக இருக்கிறேன்!’ என்று சொன்னால் திருஷ்டிப் பட்டு விடுமாம்!
மருத்துவர்கள் நம் உடலின் இயக்கத்தைப் பல விதமாக வகைப்படுத்தி இருந்தாலும், இரண்டினை முக்கியமானதாகச் சொல்கிறார்கள்...
- உடல் இயக்கம்
- உணர்வியக்கம்
என்பவையே அவை!
உடல் இயக்கம் என்பது நம் உடல் உறுப்புக்களின் செயலைக் குறிப்பது.
இதயம் ஓர் ஈடில்லா பம்ப்! அது ‘ஃப்ராக்ஷன் ஆப் செகண்ட்’ கூட ஓய்வெடுக்காமல் இரத்தத்தைப் பம்ப் செய்து நம் பாதாதி கேசம் பாங்காய்ச் செயல்படச் செய்கிறது. நுரையீரலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! எப்பொழுதும் விரிந்து, சுருங்கி நாம் வீரியத்துடன் உலாவ வகை செய்கிறது! சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், இரைப்பை என்று அத்தனை உறுப்புகளும் ஒழுங்காக இயங்கும் வரைதான் நம் ஆட்டமும்!ஓட்டமும்!
உணர்வியக்கம் என்பது நமது உடம்பில் தோன்றும் உணர்வுகளைக் குறிப்பது. நாம் மிக முக்கியமான நான்கினைப் பார்க்கலாம்!
அதிகாலை எழுந்ததும் மல, ஜலம் கழிக்கும் உணர்வு முக்கியமானது! சிலரை, அந்த உணர்வே படுக்கையிலிருந்து எழுப்பி விடும். அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள்! மலச்சிக்கலே பல நோய்களின் அறிகுறி என்கிறார்கள்.
அடுத்தது பசி உணர்வு! முன்னது சரியாக நடந்தால் இது நிறைவாக இருக்கும். கிராமங்களில் வயிறு ‘கப…கப’... என்று பசிப்பதாகக் கூறுவார்கள்! பழையதோ, இட்லியோ… வயிறார உண்பார்கள்!
பிறகு வருவது தாகம்! உடல் ஆரோக்கியத்திற்கு திரவம் இன்றியமையாதது! நமது உடல் எடையில் பெரும்பகுதி அதற்குத்தானே! வியர்க்க… வியர்க்க உடல் உழைப்பை நல்குபவர்களுக்கு இது அதிகமாகவே இருக்கும்! ஏ.சி.,அறையில், நாற்காலிகளில் அமர்ந்து பணி புரிபவர்களுக்குக் குறைவாகவே இருக்கும்.
இரவு! படுக்கையில் படுத்து விட்டால் சிறிது நேரத்தில் நித்திரா தேவி நம்மை ஆட்கொண்டு விட வேண்டும். ஆழ்ந்து உறங்கி விட வேண்டும். அது, ஆறேழு மணி நேரத்திற்குத் தொடரவும் வேண்டும்.
மேற்கூறியவற்றின் தன்மையைக் கொண்டே, நாம் நமது ஆரோக்கியத்தை அளவிடலாம்.
இவையெல்லாம் முறையாக நடைபெற வேண்டுமானால், உடற் பயிற்சியும், நடைப்பயிற்சியும் அவசியமாகின்றன. மூச்சுப் பயிற்சியும், யோகாசனங்களும் மேலும் துணை புரிபவை! அளவான சரிவிகித உணவும், தூய எண்ணங்களும், நமது உடலையும் மனதையும் மேலும் உரமாக்கும்!
இந்த அரிய பிறவியை ஆனந்த மயமாக்கும் உபாயம் நம்மிடந்தான் உள்ளது. உடல் இயக்கங்களுக்கு மதிப்பளித்து, நம் ஆரோக்கியத்தைக்காத்து அமைதியுடன் வாழ்வோம்!