ஒருவரின் ஆரோக்கியத்திற்கு ரத்த ஓட்டம் மிகவும் முக்கியமானது. ரத்தம் உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் சென்று கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் போனால் அது பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை இதில் அடங்கும். இந்தப் பதிவில் ரத்த ஓட்டத்தை இயற்கையாகவே மேம்படுத்தும் எளிய வழிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள்:
உடற்பயிற்சி என்பது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். நடப்பது, ஓடுவது, நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் இதயத்துடிப்பை அதிகரித்து ரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகின்றன. வலிமைப் பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.
காய்கறிகள், பழங்கள், முழு தானங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, ரத்தநாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இரும்பு, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் ரத்த செல்கள் உருவாகவும், இரத்த நாளங்கள் விரிவடையவும் உதவுகின்றன.
நீர், உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. போதுமான அளவு நீர் குடிப்பது ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்து ரத்தநாளங்கள் வழியாக எளிதாகச் செல்ல உதவுகிறது.
நீண்டகால மன அழுத்தம் ரத்த நாளங்களைச் சுருக்கி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே, மன அழுத்தம் இல்லாமல் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
புகைப்பிடித்தல் ரத்தநாளங்களை சேதப்படுத்தி ரத்த கட்டிகள் உருவாக வழி வகுக்கும். எனவே, உடனடியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த மிகவும் முக்கியமான ஒன்று.
உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உடல் எடையைக் குறைப்பதால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். நீங்கள் நீண்ட நேரம் நின்று அல்லது உட்கார்ந்திருந்தால் கால்களை உயர்த்தி வைப்பது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இது கால்களில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும்.
உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான முக்கியமான படி. மேற்கூறிய வழிகளை தினசரி பின்பற்றுவதனால், நீங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். இதனால், நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.