நவீன வாழ்க்கை முறை மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாக நீரிழிவு நோய் உலக அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண பலர் அரவம் காட்டி வருகின்றனர். இதில் இன்சுலின் இலை போன்ற மூலிகைகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. எனவே, இந்தப் பதிவில் இன்சுலின் இலை எப்படி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இன்சுலின் இலை என்றால் என்ன?
காஸ்டஸ் இக்னியஸ் (Costus Igneus) என்ற தாவரத்தின் இலைகள்தான் இன்சுலின் இலைகள் என சொல்லப்படுகிறது. இந்தத் தாவரம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இலையில் உள்ள சில ரசாயனங்கள் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், ரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும், இதில் உள்ள சில பொருட்கள் உடலில் ஏற்படும் அலர்ஜி பாதிப்புகளைக் குறைக்க உதவும்.
அறிவியல் ஆதாரங்கள்: இந்த இலை எப்படி ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில ஆய்வுகளில் உண்மையிலேயே இந்த இலை ரத்த சர்க்கரையைக் குறைப்பது உறுதி செய்துள்ளன. இருப்பினும், இந்த ஆய்வுகள் அனைத்தும் சிறிய அளவில் நடத்தப்பட்டவை என்பதால், பெரிய அளவில் விரிவான ஆய்வுகள் தேவை.
இன்சுலின் இலையை பயன்படுத்துவது ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தினாலும், சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். மேலும், இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாகக் குறைத்து ஹைபோ கிளைசெமியா என்ற நிலைக்கு வழிவகுக்கும். எனவே இன்சுலின் இலையை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது முக்கியம்.
இந்த இலை ஒரு மாற்று மருத்துவம் தானே தவிர, நீரிழிவு நோய்க்கான பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு முழுமையான மாற்றாக இது இருக்க முடியாது. எனவே, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான உணவு, உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.