

இருசக்கர வாகனம் (Bike) ஓட்டும்போது முதுகு பகுதியில் வலி ஏற்படுகிறதா? வண்டியில் இருந்து இறங்கியதும் வலி பறந்துவிடுகிறதா? இது சாதாரண விஷயமா? இதை கண்டுகொள்ளாமல் இருந்தால் என்ன ஆகும்? வலி எதனால் உருவாகிறது?
இருசக்கர வாகனத்தை ஓட்டுவது பெரும்பாலானோருக்கு விருப்பமான ஒன்று. ஆனால், அதுதான் அந்த நபர்களின் முதுகுத்தண்டை அமைதியாக பாதிப்படையவும் செய்கிறது. இருசக்கர வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகுவலிக்கு மூலக் காரணம் நாம் அமர்ந்திருக்கும் நிலை (Posture)தான்.
பெரும்பாலான பைக்குகள் நீண்ட பயணங்களுக்கு ஏற்ப பணிச்சூழலியல் (ergonomically) ரீதியாக வடிவமைக்கப்படவில்லை. இதனால் அதை ஓட்டுபவர்கள் வண்டிக்கேற்ப தங்களின் உடலை மோசமான தோரணைகளுக்கு பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.
நகர சாலைகளில் (city roads) உள்ள சீரற்ற பாதைகளால் ஏற்படும் அதிர்வுகள் போன்ற தொடர்ச்சியான விஷயங்கள் நம் முதுகெலும்பில் கடத்தப்பட்டு, slipped discs அல்லது தசை சோர்வு (muscle fatigue) போன்ற ஆரம்ப பிரச்னைகளை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாக்கும்.
வரக்கூடிய பிரச்னைகளை எப்படி தடுக்கலாம்?
இதைத் தடுக்க பைக் ஓட்டுபவர்கள் தங்களின் தோரணைக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும். உங்கள் முதுகை நேராகவும் (back straight), தோள்களை தளர்வாகவும் வைத்திருங்கள் (shoulders relaxed). அதிகமாக முன் சாய்வதையும் தவிர்க்க வேண்டும் (avoid leaning). இதை கடைபிடிக்கும்போது உங்களுக்கு அசௌகரியமாக தோன்றினால் உங்கள் இருக்கையின் உயரம் (seat height), கைப்பிடி நிலை (handlebar position) ஆகியவற்றை அதற்கேற்ப சரி செய்து கொள்ளுங்கள்.
கூடுதலாக அதிக மெத்தை கொண்ட இருக்கை (well-cushioned seat) அல்லது மேம்பட்ட இடுப்பு ஆதரவு (lumbar support ) போன்றவைகூட உங்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட பயணம் (city or highway) மேற்கொள்ள போகிறீர் என்றால் பின்புற பிரேஸ் (back brace) அல்லது சப்போர்ட் பெல்ட்டை (support belt) அணிவது உங்கள் முதுகெலும்பைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்கிறது.
கரடு முரடான சாலையில் என்ன செய்யலாம்?
மோசமான நகர சாலைகளில் சவாரி மேற்கொள்ள எந்தளவு நம் இருசக்கர வாகனம் தயார் நிலையில் இருக்க வேண்டுமோ அந்தளவு நம் உடலின் தயார் நிலையும் முக்கியமானது. எப்போதும் சவாரி செய்வதற்கு முன் உங்கள் முதுகு, தொடை எலும்புகளை நீட்டி மடக்கி Stretch செய்து கொள்ளுங்கள். வரக்கூடும் பிற பிரச்னைது தடுக்க நீண்ட பயணங்களின்போது, நடப்பதற்கும், stretch செய்வதற்கும் அடிக்கடி இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
முடிந்தவரை நல்ல சாலை (good road) கொண்ட பாதைகளைத் தேர்வு செய்யுங்கள். உடல் உணரும் அதிர்வைக் குறைக்க குழிகளில் (potholes) மெதுவாக வாகனத்தை இயக்குங்கள். நல்ல சஸ்பென்ஷன் (suspension) கொண்ட ஒரு பைக், அதிர்வுகளைச் சிறப்பாக உறிஞ்சி, முதுகெலும்பு அழுத்தத்தைக் குறைக்கும்.
வலியைப் பொருட்படுத்தாமல் இருந்தால்?
இதனால் வரும் முதுகுவலியை புறக்கணிப்பது சியாட்டிகா (sciatica), ஹெர்னியேட்டட் டிஸ்க்குகள் (herniated discs) அல்லது நிரந்தர நரம்பு சேதம் போன்ற நாள்பட்ட நிலைமைகளுக்கு வழிவகுக்கும். காலப்போக்கில் இது உங்கள் இயக்கத் திறன், தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கலாம். ஒரு சிறிய வலியாகத் தொடங்கும் இது கட்டுப்படுத்தப்படாவிட்டால், உங்களை முற்றிலும் பலவீனப்படுத்தும் பிரச்னையாக உருவாகலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)