கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய சருமம் சம்மந்தமான நோய்கள் பற்றியும், அது வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம். பனிக் காலத்தில் வரும் வேர்வைக்கும் வெயில் காலத்தில் வரும் வேர்வைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பனிக் காலத்தை விட வெயில் காலத்தில் வரும் வேர்வை நமது உடலில் உள்ள உப்பு சத்துக்களை அதிக அளவில் வெளியேற்றுகிறது.
அதிக வேர்வை என்பது உள்குளிரூட்டும் அமைப்பு திறமையாக செயல்படுகிறது என்பதைக் குறிக்கிறது. அறை வெப்பமடைவதற்கு முன்பே வேலை செய்யத் தொடங்கும் ஏர் கண்டிஷனரைப் போன்றது. இது உடற்பயிற்சிகளின் போது அல்லது வெப்பமான காலநிலையில் வெப்ப பக்கவாதம், சோர்வு மற்றும் அதிக வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது. ஆனால் சில நேரங்களில் அதிகளவில் வேர்வை சுரப்பது சில தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
சிலருக்கு வெயில் காலத்தில் அதிக வேர்வை சுரக்கும். அதனால் பல சருமப் பிரச்னைகள் ஏற்படும். அதனை தவிர்க்க சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும் குங்குமப்பூ மாத்திரைகளை வாங்கி காலை, இரவு என் இரண்டு மாத்திரைகளை 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதிக வேர்வை சுரக்கும் நிலை மாறும்.
வேர்வை காரணமாக நமது உடலில் அரிப்பு , படர்தாமரை மற்றும் பல சரும நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை பார்க்கலாம். வெயில் காலத்தில் நமது உடலை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களது மறைமுகமான பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். குளிக்கும் போதும் சோப்புகளையும் உப்பு நீரை பயன் படுத்தியும் நன்றாக குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதால் அழுக்குகள் நீங்குவதுடன் வேர்வை நாற்றமும் வராமல் தடுக்க முடியும்.
வெயில் காலத்தில் நம் குளிக்கும் நீரில் இரண்டு முதல் ஐந்து சொட்டுகள் எலுமிச்சம் பழ சாறையும் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பையும் போட்டு நன்றாக கலந்து குளித்து வந்தால், நமது உடலில் வேர்வை நாற்றம் வராமல் தடுக்க முடியும். எலுமிச்சம் பழ சாறு நமது உடலில் ஏற்படக்கூடிய சருமம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
கடலைமாவில் எலுமிச்சம் பழ சாறு 10 சொட்டுகள் ஊற்றி கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து விட்டு பின்னர் நம் வழக்கமாக பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி குளித்து வந்தால் நமது உடலில் ஏற்படக்கூடிய சருமம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சந்தனத்தை பன்னீரில் கலந்து உடல் முழுவதும் பூசிவிட்டு காலை குளிக்க வைத்தால் உடல் சூடு குறைவதுடன் குழந்தைகள் உடலில் கொப்பளங்கள் வராமலும் தடுக்க முடியும்.
அதிக வெயிலின் காரணமாக தலை வேர்வை தலையில் மாவு போல் தங்கும். இதனை சொறிந்தால் நக இடுக்குகளில் வெள்ளை நிற மாவு பொடுகு போல படியும். இது தொற்றாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். இதனை தவிர்க்க செம்பருத்தி இலைகளை நீரில் அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசி குளித்து வர சரியாகும்.
நாமக்கட்டியை பன்னீரில் குழைத்து தடவி வந்தால் வேனல் கட்டிகள் குறையும். கோடைகாலத்தில் வேர்வை காரணமாக ஏற்படக்கூடிய அரிப்பு படர்தாமரை மற்றும் பல சரும நோய்கள் வராமல் தடுக்க நாமக்கட்டியை பன்னீரில் குழைத்து தடவி வரலாம்.
வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் உஷ்ணம் காரணமாக சிலருக்கு வாயில் கொப்புளங்கள் ஏற்படும், சிலருக்கு வாயில் புண்கள் ஏற்படலாம். இதனை தவிர்க்க மணத்தக்காளி என்ற மிளகு தக்காளி சாற்றை சீரகத்துடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும்.
உஷ்ணம் காரணமாக சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும் அதனை நெய் அல்லது வெண்ணெய் தடவி சரிசெய்யலாம்.