வாய் சுகாதாரம் மற்றும் வாய் பராமரிப்பை முறையாகப் பின்பற்றாவிடில் பற்சிதைவு, ஈறு வீக்கம், பற்புறத் திசு நோய் (periodontitis) மற்றும் ஓரல் கேன்சர் போன்ற நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்நோய்கள் புகையிலை மற்றும் வெற்றிலை பாக்கு அதிகம் மென்றுகொண்டிருப்பவர்களுக்கு வருகிறது. இந்தியாவில் 50 சதவிகித மனிதர்களுக்கு பெரியோடான்டல் நோய் இருப்பதாகவும், பற்சிதைவு நோய் பரவலாக குழைந்தைகளுக்கு அதிகம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஃபுளோரைட் பற்பசை கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல், தினமும் மவுத் வாஷ் மற்றும் ஃபிளாஸ் (floss) உபயோகித்தல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் டாக்டரிடம் சென்று பற்களைப் பரிசோதித்துக் கொள்ளுதல், புகை, மது, வெற்றிலை பாக்கு போன்றவற்றிலிருந்து விலகி இருத்தல், இனிப்பைக் குறைத்து நார்மலான உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்களைப் பின்பற்றுவது, மேற்கூறிய நோய்த் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க உதவும்.
வாய்க்குள் வரும் நோய் வகைகள், இதய நோய், நீரிழிவு நோய், மூச்சுக் குழாய் தொற்று போன்ற மற்ற நோய்களின் வருகைக்கு வரவேற்பளிக்கவும் உடலின் பொதுவான ஆரோக்கியத்தை சீர் குலைக்கவும் செய்யும். பற்சிதைவு நோய் மற்றும் ஈறுகளில் உண்டாகும் கோளாறுகள் வலியை உண்டாக்கும். மேலும் உணவு உண்பதிலும்,பேசுவதிலும் சிரமத்தை உண்டு பண்ணும். நோய்த் தாக்குதலினால் பல் விழுந்துவிடும்போது உணவை மெல்லுவது சிரமமாகும். அதனால் அஜீரணம் உண்டாகும். போதுமான அளவு ஊட்டச் சத்துக்கள் உடலுக்குக் கிடைக்காமல் ஆரோக்கியம் கெடும்.
வாயிலிருந்து துர்நாற்றம், பற்களின் நிறம் மாறிய தோற்றம், பல் விழுவதினால் உண்டாகும் இடைவெளி போன்ற குறைபாடுகளினால் ஒருவரின் தன்னம்பிக்கை குறையும்; பிறருடன் பேசும்போது கூச்ச உணர்வு ஏற்படும்; மன நிலை ஆரோக்கியத்திலும் குறைபாடு உண்டாகும்.
பல் சம்பந்தப்பட்ட நோய்களின் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாலும், பற்களில் உண்டாகும் கோளாறுகளுக்கான சிகிச்சை பெற இன்சூரன்ஸ் வசதி இல்லாததாலும் ஓரல் ஹெல்த் பாதிக்கப்பட்டவர் தன் சொந்த பாக்கெட்டிலிருந்து கணிசமான தொகையை செலவளிக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே வரும் முன் காப்போம் என்ற கொள்கையைப் பின் பற்றி வாய் மற்றும் பற்களில் வரும் நோய்களைத் தடுக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டும், நோய்களைத் தடுக்கும் எளிய வழி முறைகளைப் பின்பற்றியும் வாய் சுகாதாரம் காப்போம்.