

இந்திய உணவு வகைகளில் வெங்காயத்தை எவ்வாறு தவிர்க்க முடியாதோ, அதே போல அதன் ஜோடியான தக்காளியையும் நம்மால் தவிர்க்க முடியாது. பொதுவாக தக்காளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் குவிந்து உள்ளன. அதை விட அதன் சுவைக்காக தக்காளி தினசரி உணவுப் பொருளாக இடம் பிடித்துள்ளது. வெங்காயத்தை தவிர்க்கும் சில சமூகத்தினர் கூட , தக்காளியை தவிர்ப்பது இல்லை என்பது தான் ஆச்சரியம். எப்போதும் விலை குறைவாக கிடைத்தாலும், திடீரென்று மகசூல் குறைந்து போய் தக்காளி விலை உயரும் போது கூட மக்கள் அதை தவிர்த்தது இல்லை.
தக்காளி வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, இதில் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் , வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள லைக்கோபீன் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கண் பார்வையை தெளிவாக்குவதிலும் தக்காளி நன்கு செயல்படுகிறது. மேலும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தக்காளியில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதில் தீமைகள் இல்லாமல் இல்லை.
தினமும் தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் ஏற்படும் என்ற ஒரு கருத்து மக்களிடம் நிலவுகிறது. ஆனால், தக்காளி உண்மையில் சிறுநீரக கற்களை ஏற்படுத்துமா? தக்காளியை யார் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்வோம்.
தக்காளியில் உள்ள வைட்டமின் சி புற்றுநோய் வருவதிலிருந்து காப்பாற்றுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சரியான அளவில் பராமரிப்பதால் இதயம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து காக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் கே, ஃபோலேட் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன, எலும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான சக்தியை அதிகரிக்கின்றன.
அதே வேளையில் தக்காளியில் அதிக அளவில் உள்ள ஆக்சலேட்கள் உடலில் சேர்ந்து கால்சியத்துடன் படிமங்களை உருவாக்குகின்றன. இவை படிப்படியாக சிறுநீரகங்களில் குவிந்து கற்களைப் போல கடினமாக மாறுகிறது. இதையே சிறுநீரக கற்கள் என்று அழைக்கிறோம். ஏற்கனவே சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்கள் அதிகமாக தக்காளி சாப்பிட்டால், பிரச்னை மோசமடையும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரகப் பிரச்னை இல்லாதவர்கள் எப்போதும் போல தக்காளியை சாப்பிடலாம். அவற்றை தினமும் சரியான அளவில் சாப்பிட வேண்டும். மேலும், தக்காளியுடன் சேர்த்து மற்ற உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் தக்காளி தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. இவர்கள் எப்போதும் பச்சையாக தக்காளியை சாப்பிடக் கூடாது
தக்காளி சாஸ் மற்றும் வேறு வகையில் பதப்படுத்தப்பட்ட தக்காளியை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தக்காளியில் மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை அதிகமாக உட்கொள்ளும்போது அமிலத்தன்மையை ஏற்படுத்தி அதனால் வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
சிலருக்கு தக்காளி ஒவ்வாமை இருந்தால் அவர்களுக்கு சரும அரிப்பு, தடிப்புகள் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த அலர்ஜி அரிதானது என்றாலும், இதுபோன்ற அறிகுறிகளைக் கவனிப்பவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிறுநீரக கல் பிரச்சனை , இரைப்பை பிரச்சினை, மூட்டு வலி, யூரிக் அமிலம் தொல்லை உள்ளவர்கள் மட்டும் தக்காளியை தவிர்க்கலாம். மற்றபடி சாதரணமாக ஆரோக்கியம் உள்ளவர்கள் சரியான அளவில் தக்காளி சாப்பிடுவதால் தொந்தரவு வராது.