நாம் உண்ணும் உணவு நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அவை இதயத்திற்கு இதம் அளிக்கின்றன. அவை ரத்த அழுத்தத்தைக் குறைத்து கொலஸ்ட்ரால் அளவை சரி செய்து இதய நோய்கள் வருவதைக் குறைக்கின்றன. இதய ஆரோக்கியத்திற்கு உகந்த 5 உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இவை விட்டமின்கள், மினரல்கள் மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்தவை. இதயம் நன்றாக செயல்படுவதற்கும், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகின்றன. கேல், அருகுலா, பசலைக்கீரை, பிரக்கோலி, காலிஃப்ளவர் போன்றவை நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் உடலின் கொலஸ்ட்ரால் அளவை சரியான அளவில் வைக்க உதவுகின்றன. இவற்றை சாலடுகள், சூப்புகள் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்த்துக் கொள்ளலாம். பொரியலாக செய்தும் சாப்பிடலாம். மேலும் காரட், பூண்டு, தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் போன்ற காய்கறிகளும் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தவை.
புதிய பழங்கள் இதயத்திற்கு மிகவும் இதம் அளிப்பவை. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சியும் கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. தினமுமே பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும். ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி, கிரேன் பெர்ரி போன்றவற்றில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் உள்ளதால் இதய நோய்களிலிருந்து காக்கின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன.
இவற்றில் நார்ச்சத்து, விட்டமின் பி மற்றும் உடலுக்கு தேவையான மினரல்கள் நிறைந்திருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவுகின்றன. எனவே பாஸ்தா, பிரட் துண்டுகள் போன்றவற்றை விட முழு தானியங்களை உண்ணும்போது இதய ஆரோக்கியத்திற்கு வழி செய்கின்றன. சரியான எடையை பராமரிக்கவும் உதவுகின்றன.
ஆரோக்கியமான எண்ணெய், விதைகளும் கொட்டைகளும் நல்ல கொழுப்பின் ஆதாரமாகத் திகழ்கின்றன. மேலும் அவற்றில் நார்ச்சத்தும்
உள்ளதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கின்றன. ஆலிவ் ஆயில் அவகேடா பழம் இரண்டும் இதயத்திற்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்களை அளித்து இதயத்தை இதமாக வைக்கின்றன. சியா விதைகள், ஆளி விதைகள், சப்ஜா, பூசணி விதைகள், வால்நட்டுகள், போன்றவை இன்சுலின் சுரப்பை ஆரோக்கியமாக வைத்து, எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இவற்றை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒமேகா 3 உள்ள மீன்கள் கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். உடலில் வீக்கங்களை குறைத்து முறையற்ற இதயத்துடிப்பையும் சரி செய்கிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது ஒமேகா 3 உள்ள மீன்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை வறுத்து உண்ணாமல் வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சால்மன், சார்டின், கானாங்கெளுத்தி போன்றவை நீண்ட கால இருதய ஆபத்தை குறைக்க உதவுகின்றன.
இந்த 5 வகை உணவுகளோடு சேர்த்து, முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சியும் மேற்கொண்டு, அமைதியான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் இதயம் ஆரோக்கியமாக இயங்கும்.