

மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் உருவான மருத்துவ முறையே பழைய காலத்து நாட்டு வைத்திய (Natural home remedies) முறை ஆகும். நோய் என்பது உடலின் சமநிலை குலைவதால் ஏற்படுகிறது என்ற அடிப்படையில், இயற்கை வளங்களை பயன்படுத்தி உடலை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வருவதே இந்த வைத்தியத்தின் நோக்கமாக இருந்தது. மூலிகைகள், வேர்கள், இலைகள், பட்டைகள், கனிகள், மண், நீர் போன்ற இயற்கைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த வைத்தியம், தலைமுறை தலைமுறையாக அனுபவ அறிவின் மூலம் பரம்பரைச் சொத்தாக பாதுகாக்கப்பட்டது. எளிமையும் நம்பிக்கையும் கொண்ட இந்த நாட்டு வைத்திய முறை, மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்த ஒரு வாழ்வியல் மருத்துவமாக விளங்கியது.
1.காயம் பட்டால் அருகம்புல்லைச் சாறு பிழிந்து காயம் பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் ரத்தம் ஒழுகுவது நிற்கும். சீழ் கோர்க்காது. இதேபோல் வெற்றிலைச் சாறையும் வைத்துக் கட்டலாம்.
2. தொண்டை வலிக்கு வடித்த நீரில் சிறிதளவு உப்பை சேர்த்து கொப்பளிப்பது நல்லது.
3. உடலில் கொதித்த நீர் அல்லது ஆவி பட்டு கொப்புளங்கள் ஏற்பட்டால் உடனே தேன் தடவ வேண்டும்.
4. சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, கற்கண்டு, ஆகியவற்றை ஒன்று சேர்த்து அரைத்து சிறிதளவு உட்கொண்டால் இருமல் மற்றும் சளி குறையும்.
5. சுக்கு, மிளகு, கற்பூரவல்லி, துளசி, குடம்புளி, வெள்ளைப் பூண்டு ஆகியவை சேர்த்துக் கசாயம் காய்ச்சிக் குடித்தல், காட்டு துளசியின் ஆவி பிடித்தல் ஆகியவை சளி மற்றும் காய்ச்சலுக்குச் சிறந்த மருந்தாகும்
6. உணவு சாப்பிட்ட பின் வாந்தி ஏற்பட்டால் உப்பு மாங்காயைத் தின்னலாம் அல்லது மோர் குடிக்கலாம்.
7. கற்பூரவல்லியை கசக்கி முகர்ந்தால் இருமல் குணமாகும். நெற்றியிலும் தடவலாம்.
8. இளநீர் குடித்தால் கர்ப்பிணி பெண்களின் வாந்தி நிற்கும். தலைவலி வந்தால் சந்தனத்தை அரைத்து நெற்றியில் பூச வேண்டும்.
9. கடும் தலைவலி ஏற்பட்டால் குருமிளகுத் தூளை நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும்.
10. ஆமணக்கு விதையை தேங்காய் எண்ணெயில் வறுத்து தடவினால் சேற்றுப்புண் குணமாகும்.
11. எருக்கு செடியின் பால் அல்லது ஆமணக்குப் பால் இவற்றை தடவினால் நகச்சுற்றி குணமாகும்.
இன்றைய அறிவியல் மருத்துவ வளர்ச்சியின் மத்தியில் கூட, பழைய காலத்து நாட்டு வைத்திய முறையின் முக்கியத்துவம் குறையாமல் தொடர்ந்து நிலைத்து வருகிறது. பக்கவிளைவுகள் குறைவு, செலவு குறைவு, இயற்கை சார்ந்த அணுகுமுறை ஆகிய காரணங்களால், இம்முறை இன்றும் பலரின் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. நோயை மட்டும் அல்லாமல், உடலையும் மனதையும் ஒருங்கிணைந்த முறையில் சீரமைக்கும் திறன் கொண்ட நாட்டு வைத்தியம், நம் பாரம்பரிய அறிவின் பொக்கிஷமாகும். எனவே, இந்த மருத்துவ முறையை மதித்து, அறிவியல் ஆய்வுகளுடன் இணைத்து பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)