‘உடலே, மனமே இருவரும் நலமா?’ நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்க்கை நலமாகும். ஆரோக்கியமாக இருப்பது என்றால் உடலும் உள்ளமும் இரண்டும் சேர்ந்ததுதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாரையாவது நாம் சந்தித்தால், ‘நலமாக இருக்கிறீர்களா?’ என்பதுதான். இன்னும் சிலர், ‘உங்களுக்கு அந்த உடல் பிரச்னை இருந்ததே, அது அப்படியேதான் இருக்கிறதா?’ என்று கேட்டு தர்மசங்கடத்தை உண்டாக்குவார்கள். அதேபோல், பதில் அளிக்கும்போது சிலர், ‘நான் நலமாக இருக்கிறேன்' என்பார்கள். ஏதாவது உடல் பிரச்னை இருந்தால் கூட ‘I am fine’ என்று சொல்வது சிலரது பழக்கம். சிலர், ‘ஏதோ இருக்கேன். மனசுதான் சரியில்லை. அப்பப்போ மக்கர் பண்ணுகிறது' என்பார்கள்.
மனது சரியில்லை என்றால் கண்டிப்பாக அதை கவனிக்க வேண்டும். தலைவலி என்றால் கூட உடனே மாத்திரை போட்டு சரிபண்ணிக்கொள்ளும் பலர், மனதுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நமது முந்தைய தலைமுறையினரை விட தற்கால தலைமுறையினருக்கு எல்லா விதத்திலும் முன்னேற்றம் இருந்தாலும், மகிழ்ச்சி இல்லை. மன அழுத்தம் இருக்கிறது. சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பாடச்சுமை மிகவும் அதிகம். இதில் முதல் மார்க் வாங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளி முடிந்து வந்ததும் ட்யூஷன் அனுப்பி நிறைய மார்க் வாங்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள். குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டால் பெற்றவர்கள் பிள்ளைகளிடம் கோபப்படுவதும், அதனால் பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் தினசரி பார்க்கக்கூடிய நிகழ்வு.
அந்தப் பருவம் தாண்டி டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளுக்கு படிப்பு என்பது இன்னும் ஒருபடி தாண்டி வாழ்க்கை பாதையை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பதால் பெற்றோர்கள்தான் பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டும். கண்காணிக்க வேண்டிய வயதுதான். ஆனால், அதற்காக நம்பிக்கை இல்லாமல் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது மிகவும் தவறு.
தவறுகள் செய்தால் நண்பன் போல நடத்தி தவறை திருத்தி நல்ல வழிக்குக் கொண்டு வரச் செய்ய வேண்டும். பிள்ளைகளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும். நம் பிள்ளைகள் மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைப் புரியவைக்க வேண்டும். அப்போது மன அழுத்தம் இரு பக்கங்களிலும் வராது.
வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மேற்கூறிய இரண்டு பருவங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. வயது முதிர்வு காரணமாக வரும் நோய் தவிர பிறரை சார்ந்திருக்கிறோம் என்ற நினைப்பு அவர்கள் மனதை பாதிக்கும். மனைவியை இழந்த கணவன், கணவனை இழந்த மனைவி என இரு தரப்பினரும் பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி உள்ளது. பிறரை சார்ந்திருக்கும் நிலை, தாழ்வு மனப்பான்மையாக மாறி விடுகிறது.
கூட்டுக் குடும்பமாக இருந்தால் பேரன், பேத்தி என அவர்களுடன் நேரத்தை செலவிடும்போது மன அழுத்தம் இருக்காது. சிலர் தங்கள் வயது நண்பர்களுடன் மாலையில் கோயில் செல்வது, பூங்காவில் அமர்ந்து பரஸ்பரம் பேசிக்கொள்வது என்று மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க எல்லா பருவங்களிலும் நாம் நம் மீது சிறிது கவனம் செலுத்தினால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.