

பல்வேறு வடிவங்களில் இருக்கும் கூழாங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக நிறுத்துதல் ‘ஸ்டோன் பேலன்சிங்’ அல்லது ‘ராக் பேலன்ஸ்’ அல்லது கல்லை சமநிலையாக்கல். இது பொழுதுபோக்கு விளையாட்டாக பலராலும் செய்யப்படுகிறது. பொதுவாக, சீரற்ற வடிவத்தில் இருக்கும் கூழாங்கற்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் நிலைத்தன்மையோடு நிற்பதை உருவாக்குவது என்பது, தனித்துவமான கலையாக கருதப்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் சோர்வை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா? ஸ்பாவுக்குச் சென்றோ அல்லது வேறு எங்கும் சென்றோ பணம் செலவழிக்க வேண்டாம். இயற்கையாகவே கிடைக்கும் இந்த மலிவான, வேடிக்கையான, ‘ஸ்டோன் பேலன்சிங்’ பொழுதுபோக்கு விளையாட்டு உங்களுக்கு செலவே இல்லாத சிகிச்சை முறையாகும்.
கற்களை சமநிலைப்படுத்துவது படைப்பாற்றல், மன அமைதி மற்றும் தியான பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. சம வடிவம் இல்லாத கூழாங்கற்களை சமநிலைப்படுத்த ஒருவருக்கு நிதானம், மன அமைதி, ஒழுங்கு, விடாமுயற்சி போன்ற இயல்புகள் வேண்டும். மக்கள் கற்களை சமநிலைப்படுத்தும் விளையாட்டை விளையாடும் போது அது அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நன்மைகளை வழங்குகிறது என்று கூறுகிறார்கள்.
‘இது தியானத்தின் புதிய வழி, ஆனால் உங்கள் கண்களைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் செய்யப்படும் ஒன்று. இது உங்களுக்குள் இருக்கும் அமைதியைக் கண்டறிய உதவுகிறது’.
நீங்கள் ஒரு நதிப்படுகை அல்லது மலையோரப் பகுதிக்குச் செல்லுங்கள் அல்லது சாலையோரப் பாதையில் கற்கள் இருந்தால் வெவ்வேறு அளவுகள் மற்றும் வெவ்வேறு வடிவங்களில் சிலவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் கற்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் அனைத்து கற்களும் ஒரே வடிவத்தில் இருந்தால் உருவாக்கம் அவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருக்காது. முதலில் இரண்டு அல்லது மூன்று கல்லில் தொடங்குங்கள். அந்த கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக உட்கார வைப்பதே உங்களுடைய இலக்கு.
அதிலேயே உங்கள் கவனம் முழுவதும் இருக்க வேண்டும். ஒருமுறையில் உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்காது. ஆம், அவை விழும். ஆனால் நீங்கள் விடாமல் பலமுறை முயற்சி செய்யுங்கள். கடைசியில் இதோ, அந்த பொறுமை பலனளிக்கும்! உங்களை திகைக்க வைக்கும் ஒரு ஈர்ப்பு விசையை நீங்கள் காண்பீர்கள்!
ராக் பேலன்ஸ் கவனச்சிதறல்களையும் எதிர்மறை எண்ணங்களையும் நீக்குகிறது. ஆரம்பத்தில் கற்களை சமநிலைப்படுத்தத் தொடங்கும்போது ஒரு மணி நேரம் அல்லது பல மணிநேரம் கூட ஆகலாம். ஆனால் இதற்கு பொறுமையும், சகிப்புதன்மையும் அவசியம். பின்னர் படிப்படியாக செய்ய பழகிய பின்னர் ஐந்து முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
இதை நீங்கள் தொடங்கும் போது'நான் இதைச் செய்ய முடியுமா?' என்ற எண்ணம் வரும். அடுத்த எண்ணம், 'இது ஒரு தடைதான், கடந்த காலத்தில் நான் எதிர்கொண்ட தடைகளைப் போலவே தீர்க்கப்படும்' என்று தோன்றும். நீங்கள் விடாமல் தொடரும்போது, மற்ற எல்லா எண்ணங்களும் மந்தமடையும், உங்கள் கவனம் சிதறாமல் அதிகரிப்பதை உணரலாம்.
'ஏழு முறை விழுந்து எட்டு முறை எழுந்திரு' என்ற பழமொழியையும் இது உயிர்ப்பிக்கிறது, ஏனெனில் நீங்கள் இறுதியாக வெற்றி பெறும் வரை தோல்வியடைவீர்கள்.
அதன் பெயரைப் போலவே, இந்த கலை வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கற்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கப்பட்டு, கற்பனை செய்ய முடியாத பல்வேறு நிலைகளில் மற்றும் இயற்பியல் விதிகளால் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பது பற்றியது.
பாறைகளின் இயற்பியல் விதிகளை சிறிது அறிந்திருக்க வேண்டும். அதே வேளையில், இந்த இயற்பியல் விதிகள் தெரியாவிட்டாலும்கூட தொடர்ந்து இந்த கூழாங்கற்களை சமநிலைப்படுத்த முயலும் போது, இயல்பாகவே இந்த விதிகளை உணர முடியும்.
உலகின் பல்வேறு நாடுகளில் இதை ஒரு யோகக்கலை என்ற வடிவில் கற்பிக்கின்றனர். ஏற்ற இறக்கங்கள் கொண்ட வாழ்க்கை சூழலை எளிதாக எதிர்கொள்ள ஸ்டோன் பேலன்சிங் கலை உதவுவதாக பலரும் கூறுகின்றனர். ஒருவரின் உள் அமைதி மற்றும் ஒழுக்கம் அதிகரித்து ஆன்மிக தொடர்பை உருவாக்குவதாக நம்புகின்றனர்.
தமிழர் கட்டுமானத்தில் கோபுரங்கள் பலவும் இந்த ஸ்டோன் பேலன்சிங் அடிப்படையில் அமைந்தது என்று கூறப்படுகிறது. கோபுரங்களை கட்டும் போது, கற்களை இடத்திற்கு ஏற்றார்போல செருகல், சிற்பங்களை சரியான சமநிலையில் வடிவமைத்தல், புவி ஈர்ப்பு விசைக்கு தக்க எதிர்ப்பு சமநிலை ஏற்படுத்துதல் என்று கற்களை பல்வேறு வடிவங்களில் செதுக்கி நிலை நிறுத்தி மிகப்பெரிய கட்டுமானங்களை ஏற்படுத்தியதும் இந்த ஸ்டோன் பேலன்சிங் செயல்முறை வடிவத்தின் அடிப்படையில்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.