
துளசி ஒரு அற்புதமான மூலிகைச் செடி. துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் நோய் நொடிகள் நெருங்காது. நோய் வந்தாலும் துளசி அருமருந்தாக (Tulasi benefits) பயன்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடி இருப்பது மிகவும் நல்லது. இதனால் விஷ ஜந்து வீட்டில் அண்டாது . கொசுக்கள் கூட குறைவாய் இருக்கும். துளசி மாடம் வைத்து வீட்டில் துளசியை வளர்க்கலாம். இல்லாவிட்டால் ஒரு பூந்தெட்டியில் கூட துளசி செடியை வளர்க்கலாம்.
துளசியுடன் சிறு துண்டு சுக்கையும் இரண்டு கிராம்பையும் சேர்த்து வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டுக் கொண்டால் போதும் எப்பேர்ப்பட்ட தலைவலியானாலும் உடனே சரியாகிவிடும்.
உடம்பில் படை ஏற்பட்டு சிரமப்படுத்தினால் துளசி சாற்றுடன் வெற்றிலை சாற்றையும் கலந்து நன்கு தடவி வரவேண்டும். சில நாட்களுக்குள் படை காயத் தொடங்கி விடும்.
துளசி சர்பத் செய்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் தேகத்தில் பலம் ஏறும் இரத்த விருத்தி ஏற்படும். காபிக்கு பதிலாக துளசி டிகாஷன் போட்டு பாலில் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
துளசியை நிறைய கொண்டு வந்து தலையணைக்கு மேல் பரப்பி வைத்து அதன் மேல் ஒரு துணியை போட்டு படுத்து விட்டால் போதும் தலையில் உள்ள பேன்கள் எல்லாம் இறங்கி விடும். பேனுக்கு துளசி (Tulasi) பொல்லாத விஷமாகும்!
துளசியை கொண்டு வந்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஐந்தாறு மணி நேரம் ஊறவைத்து பிறகு துளசியைப் பிழிந்து எடுத்துவிட்டு அந்த தண்ணீரை மாத்திரம் சாப்பிட்டு வந்தால் போதும் எந்த வியாதியும் வராது. பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் கொடுப்பது இந்த அடிப்படையில் தான் இந்த துளசி குடிநீர் (Tulasi) அருந்தி வருபவர்களுக்கு கல்லீரல் மண்ணீரல் நோய்கள் அணுகுவதே இல்லை.
குழந்தைகளுக்காக பசும்பாலை காய்ச்சும் போது அதில் ஐந்து ஆறு துளசி இலைகளையும் போட்டு காய்ச்சி கொடுத்தால் குழந்தைகளுக்கு எந்த வித பிணியும் வராது. குழந்தைகள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி இலைகளை வீணாக்காமல் மழைக்கால குடிநீரில் போட்டு வைத்து குடித்தால் ஜலதோஷம் சளி இருமல் வராமல் பாதுகாக்கும்.