
துளசி செடி, பகவான் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமான விருட்சம். இந்துக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படும் துளசியை மறந்தும்கூட இந்த ஐந்து நாட்களில் பறிக்கக் கூடாது என்று பெரியோர்கள் கூறுவர். அப்படிப் பறித்தால் மகாலட்சுமி தாயாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுவதோடு, பல்வேறு தீய விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமைகளில் துளசி இலைகளைப் பறிப்பது மிகவும் தவறானதாகும். சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் துளசியைப் பறித்தால் எதிர்மறை விளைவுகளும், துரதிஷ்டமும் வந்து சேரும். கெடுதல்கள் வருவதுடன் வாழ்வில் துன்பங்களும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
துவாதசி: துவாதசி திதியன்று துளசி ஓய்வெடுக்கும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் துளசியைப் பறிப்பது துளசி தேவியை தொந்தரவு செய்வது போல் ஆகி விடும். இது பகவான் மகாவிஷ்ணுவின் கோபத்தைப் பெற்றுத் தருவதோடு, துன்பத்தையும் தரும். துவாதசியில் துளசியை வழிபடுவது நல்லது. அன்றைய தினம் அவள் ஓய்வெடுப்பதால் துளசியின் ஆற்றல் இன்று அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அமாவாசை: அமாவாசை என்பது மிகவும் முக்கியமான வழிபாட்டு நாளாகும். இந்நாளில் துளசி இலைகளைப் பறிப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டில் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவை பாதிக்கப்படும். ஆகவே, அமாவாசையன்று துளசி இலைகளைப் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சந்திர கிரகணம்: சந்திர கிரகண நாளில் துளசியில் ஆற்றல் அபரிமிதமாக இருக்கும். அந்த சமயத்தில் அவற்றைப் பறிப்பது வாழ்வில் தீய விளைவுகளை ஏற்படுத்தும். சந்திர கிரகணம் என்பது மனம்,உணர்ச்சி சம்பந்தப்பட்ட நாளாகும். துரதிஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க இந்நாளில் துளசியைப் பறிக்கக் கூடாது.
செவ்வாய்கிழமை: செவ்வாய்கிழமை என்பது மங்கலகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் துளசியைப் பறித்தால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். மாறாக, செவ்வாய்கிழமையன்று துளசிக்கு தண்ணீர் விட்டு மாடத்தின் அருகே கோலமிட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும். இது மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும்.
துளசியைப் பறிக்க உகந்த நாட்கள்: திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பறிப்பது நல்லது. அஷ்டமி, நவமி, சதுர்த்தசி நாட்களும் துளசியைப் பறிக்க ஏற்ற நாட்களாகும். துளசியை சூரிய உதயத்திற்குப் பிறகும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட நேரத்தில்தான் பறிக்க வேண்டும்.