தற்போது நிலவும் மழைக்காலம் மற்றும் வரும் மாதங்களில் நிலவ இருக்கும் குளிர், பனி என மாறிவரும் காலநிலையில் நம் உடல் நிலையிலும் உலர் சருமம், ஒவ்வாமை, நோய்த்தொற்று என பலவித மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடி ஜெயிக்க நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வது அவசியமாகிறது. அதற்கு தினசரி நாம் உண்ணும் உணவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவைகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது நன்மை பயக்கும். இந்நிலையில் நாம் உண்ண வேண்டிய அத்தியாவசிய உணவுப் பட்டியலை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் A, C, E போன்ற சத்துக்கள் அடங்கிய ப்ரோக்கோலி.
2. இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கக்கூடிய ஒரு வகையான கூட்டுப்பொருளை தன்னுள் கொண்டுள்ள ஷிடேக் மற்றும் மெய்டேக் (Shiitake & Maitake) வகைக் காளான்கள்.
3. வீக்கத்தைக் குறைக்கும் குணமும், ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் தன்மையும் கொண்டு தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் வலிமை கொண்ட பூண்டு.
4. நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைப் பெருக்க உதவும் ஆரஞ்சு, கிரேப்ஸ், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழ வகைகள்.
5. அதிகளவு நோயெதிர்ப்புச் சக்தி, புரோட்டீன், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டு, சளி, ஃபுளு ஜுரம் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தக் கூடிய சிக்கன் சூப்.
6. உடம்பில் ஏற்படக்கூடிய ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொண்ட ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ராஸ்பெரி பழங்கள்.
7. நோயெதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் அடங்கிய க்ரீன் டீ.
8. இரும்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், வைட்டமின் C ஆகிய ஊட்டச்சத்துக்களை அதிகளவில் தன்னுள் கொண்டு உடம்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் காக்கவல்ல பசலைக்கீரை.
9. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்டதும், வீக்கத்தைக் குறைக்கவல்லதுமான சால்மன் மீன்.
10. வீக்கத்தைக் குறைக்கவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யக் கூடிய மஞ்சள் மற்றும் இஞ்சி. இஞ்சியில் டீ போட்டும், சூப் செய்தும் சாப்பிடலாம்.
11. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் E உள்ளடக்கிய பாதம் பருப்புகள்.
12. ப்ரோபயோடிக் குணங்கள் கொண்ட யோகர்ட் மற்றும் நொதிக்கச் செய்த (fermented) உணவுகள். இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன் ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் சீராக்கும்.
மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு நோயின்றி வாழ்வோம்.