
சிலருக்கு திடீரென்று கண்கள் துடிப்பதை பார்த்திருப்போம். அவ்வாறு கண்கள் துடிப்பதால் ஏற்பட போகும் பலன், என்ன காரணத்திற்காக கண்கள் துடிக்கிறது, என்ன விஷயங்கள் செய்தால் கண்கள் துடிப்பதை தவிர்க்க முடியும்? என்பதை இந்த பதிவில் காண்போம்.
பொதுவாக வலதுக்கண் துடித்தால் நல்லது என்றும் இடதுக்கண் துடித்தால் கெட்டது என்றும் நம் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் கண்கள் துடிப்பதற்கு மருத்துவ ரீதியாக என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
நம்முடைய ஆரோக்கியத்தில் குறைப்பாடு ஏற்படும் போது கண்கள் துடிக்கும். மேலும் புறநரம்புகள் இயல்பிற்கு மீறிய தூண்டுதல் ஏற்படுவதால் கண்கள் துடிக்கும். மது பழக்கம், காபி போன்றவற்றை எடுத்துக்கொள்வது, கண்களில் இருக்கும் வறட்சி, மன அழுத்தம், சோர்வு, அதிக நேரம் புத்தகம் படித்தல் ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. கண்கள் துடிப்பது நீண்டகாலம் தொடர்ந்து இருந்தால் மூளையில் ஏதேனும் பிரச்னை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கண்களுக்கு நல்ல ஓய்வுக்கொடுப்பதின் மூலமாக இதைக் குறைக்கலாம். நல்ல உறக்கம் வேண்டும், வெதுவெதுப்பான துணியைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தல் கண்களில் இருக்கும் நரம்புகளில் இறுக்கம் குறைந்து கண் துடிப்பது குறையும் என்று சொல்லப்படுகிறது.
கண்கள் துடிப்பதற்கு சாஸ்திர ரீதியான பலன்கள் என்னவென்று பார்த்தால், ஆண்களுக்கு வலதுக்கண் துடித்தாலும், பெண்களுக்கு இடதுக்கண் துடித்தாலும் அது நன்மையைத் தரும். இதற்கு நேர்மாறாக ஆணுக்கு இடதுக்கண்ணும், பெண்ணுக்கு வலதுக்கண்ணும் துடித்தால் கெடுதலான பலன் ஏற்படப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
ஆண்களுடைய வலதுப்புற கண் புருவம் துடித்தால், அவர்களுக்கு புகழ், பெருமை ஏற்படும். அதுப்போல வலதுக்கண் இமை துடித்தால், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் சீக்கிரம் தீரும். ஆண்களுக்கு வலதுக்கண் கீழ்சதைப்பகுதி துடித்தால் அவர்களுக்கு பண வரவு ஏற்படும். ஆண்களின் இடதுப்புறம் உள்ள புருவம் துடித்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வம்பு, வழக்கு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
பெண்களின் இடதுக்கண் பகுதி முழுவதும் துடித்தால் செல்வம் கிடைக்கும். இடதுக்கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை விரைவில் சரியாகும். பெண்களின் வலதுப்புற கீழ் இமை துடித்தால் கணவருக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
குழம்புதா மக்களே...? இதெல்லாம் விடுங்க... கண்கள் துடித்துக்கொண்டே இருந்தால், நல்லதா கெட்டதா என்று யோசிக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்!