தூக்கம், நித்திரைை, உறக்கம், துயில் கொள்ளுதல், சயனம், பள்ளி கொள்ளுதல், துஞ்சல் என்று தூக்கத்திற்கு பல பெயர்கள் உள்ளன. இவற்றின் விளக்கம் குறித்துப் பார்ப்போம்.
1) தூக்கம்:
தூக்கம் என்பது மனம் மற்றும் உடலின் செயல்பாடுகள் குறைக்கப்பட்ட ஒரு நிலை. உடலுக்கு ஓய்வு அளித்து மனதை அமைதிப்படுத்தும். ஆரோக்கியமாக இருப்பதற்கான மூன்று முக்கிய தூண்களில் தூக்கமும் ஒன்று. உணவும், உடற்பயிற்சியும் மற்ற இரண்டு தூண்கள். இது ஒரு தற்காலிகமான செயலற்ற நிலை. இதில் உடலும் மனமும் ஓய்வெடுக்கின்றன.
2) நித்திரை:
இதுவும் ஓய்வெடுக்கும் ஒரு இயல்பான நிலை தான். நித்திரை என்பது படுத்து கொண்டு கண்களை மூடி உறங்குவதை குறிக்கும். இது சற்று இலக்கியத் தன்மையுடன் பயன்படுத்தப்படுகிறது. நித்திரை என்பது வடமொழிச் சொல்லானாலும் தமிழில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
3) உறக்கம்:
படுத்துக்கொண்டு உறங்கும் நிலையை தூக்கம், உறக்கம் என்று குறித்தாலும் உறக்கம் என்பது தூக்கத்தை விட சற்று ஆழமான, ஓய்வான நிலையை குறிக்கும். தூக்கம் என்பது ஒரு பொதுவான சொல், அதுவே உறக்கம் என்பது ஆழ்ந்த ஓய்வான அல்லது மரணத்திற்கு ஒத்த நிலையை குறிக்கும் சொல்லாகும். உறக்க நிலை என்பது ஒரு நீண்ட கால உறக்கம் என கொள்ளலாம்.
4) துயில்:
துயில் எனும் சொல் தமிழ் இலக்கியங்களில் உறக்கம், தூக்கம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. உடலும் மனமும் ஓய்வெடுக்கும் நிலையை இது குறிக்கும். பொதுவாக படுத்துக்கொண்டு கண்களை மூடி துயில் கொள்வதை குறிக்கும். விழிப்புற்றவுடன் புத்துணர்வைப் பெறுவது ஆழ்ந்த துயிலின் ஆரோக்கியமான அடையாளமாகும். பண்டைய சங்க இலக்கியங்களில் துயில் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
5) சயனம்:
இது ஒரு சமஸ்கிருத சொல். தூங்குதல் என்று அர்த்தம் கிடையாது. சயனமென்றால் படுத்திருத்தல்.
6) துஞ்சல்:
துஞ்சல் என்றால் உறக்கம் அல்லது தூக்கம் என்றுதான் பொருள். ஆனால் இது இயற்கையான மரணத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
7) பள்ளி கொள்ளுதல்:
பள்ளி கொள்ளுதல் என்பது படுத்து ஓய்வெடுப்பது. உடலை சாய்வாக வைத்துக் கொண்டு ஓய்வு எடுப்பதை குறிக்கும் சொல். இது தூங்குவதற்கு முன் அல்லது ஓய்வெடுக்கும் பொழுது செய்யப்படும் ஒரு செயலாகும்.
தூக்கத்தில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன.
REM தூக்கம் மற்றும் REM அல்லாத தூக்கம் என்று இரண்டு வகைகள் உள்ளன.
REM அல்லாத தூக்கத்தில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை தூக்கம் மிகவும் லேசானதாக இருக்கும். இது முதலில் தூங்கும் போது நிகழ்கிறது. இரண்டாவது நிலையில் உடல் சற்று தளர்வடையும். அப்பொழுது உடல் வெப்பநிலை குறையும். தசைகள் தளர்வடையும். இதயம் மற்றும் சுவாச விகிதம் குறையும். மூன்றாவது நிலை என்பது மிகவும் ஆழமான புத்துணர்ச்சி ஊட்டும் தூக்கமாகும். இது உடல் மீண்டு வளர அனுமதிக்கிறது.
REM தூக்கம் என்பது கனவுகள் தோன்றும் நிலை. இந்நிலையில் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதாவது மூளையின் செயல்பாடு விழித்திருக்கும் பொழுது இருப்பது போலவே இருக்கும். ஆனால் தசைகள் மிகவும் தளர்வாக இருக்கும். இந்த ஆழ்ந்த தூக்கம் என்பது உடல் புத்துணர்ச்சி பெற மிகவும் அவசியம்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே.