
பொதுவாகவே, டெங்கு ஜுரம் வந்துவிட்டால் உடல் வலி, அதிகமான குளிர் போன்றவை ஏற்படும். இதுபோன்ற தருணங்களில் இந்தப் பதிவில் கூறப்போகும் தேநீரை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், இந்தத் தேநீரை தொடர்ந்து பருகி வந்தால், டெங்கு காய்ச்சலின் தாக்கத்திலிருந்து விரைவில் தப்பிக்கலாம். டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, சராசரியாக காய்ச்சல் ஏற்பட்டாலும் இந்தத் தேநீர் தயாரித்து குடித்தால் விரைவில் குணமடையும்.
கொய்யா இலை தேநீர்: கொய்யா இலை தேநீர் பருகுவதால் டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியும். இந்த தேநீர் தயாரிக்க துளிராக இருக்கும் 3 கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து டீ போல குடிக்கலாம். இதை டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து என்றும் கூறுகிறார்கள். கொய்யா இலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் எல்லாவிதமான காய்ச்சலும் இதில் சரியாகும்.
பிரியாணி இலை தேநீர்: உணவின் சுவையை அதிகரிக்க நாம் பிரியாணி இலைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் டெங்கு ஜுரத்தின் தாக்கம் குறையும். தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்தத் தேனீரைப் பருகலாம்.
நிலவேம்பு தேநீர்: நிலவேம்பு இலையின் பண்புகளை அறிய பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் டெங்குவிலிருந்து குணமடைய உதவும் ஆன்டிவைரல் பண்பு உள்ளதால் இதில் டீ போட்டு குடித்தால் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். எல்லாவிதமான வைரஸ் தொற்றுகளிடமிருந்தும் இந்த இலைகள் எதிர்த்துப் போராடுகின்றன. எனவே, நிலவேம்பு கசாயம் குடிப்பதன் மூலமாகவும் வைரஸ் ஜுரத்திலிருந்து தப்பிக்கலாம்.
பப்பாளி இலை தேநீர்: பப்பாளி இலைகள் டெங்கு ஜுரத்துக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கக்கூடிய இலையாகக் கருதப்படுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலையில் கசாயம் போட்டு தினசரி இரண்டு வேளை குடிக்கலாம். இது இரத்தப் பிளேட்லெட்களை அதிகரிக்க உதவும் எனப்படுகிறது. இது மிகவும் அத்தியாவசிய ஆயுர்வேத செய்முறைகளில் ஒன்றாகும்.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கூறிய தேநீர் வகைகளை எடுத்துக் கொண்டாலும், தகுந்த மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியமானதாகும். எனவே, உங்களுக்கு டெங்குவின் அறிகுறிகள் தென்பட்டால், வீட்டு வைத்தியம் செய்து சரி செய்து கொள்ளலாம் என எண்ணாமல், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.